டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழு இன்று புதுவை வருகை
By DIN | Published on : 15th October 2017 01:21 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்தியக் குழுவினர் ஞாயிற்றுக்கிழமை (அக். 15) வருகின்றனர்.
தமிழகத்தில் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்தது. 5 பேர் கொண்ட இந்தக் குழுவில் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறைப் பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ், தேசிய தொற்று நோய்த் தடுப்புத் திட்டத்தின் இணை இயக்குநர் கல்பனா பர்வா, தில்லி கே.எஸ்.சி.எச். மற்றும் எல்.எச்.எம்.ஜி. குழும மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை இணைப் பேராசிரியர் சுவாதி டுப்ளீஸ், பூச்சியல் வல்லுநர் வினய் கார்க் மற்றும் தேசிய தொற்று நோய்த் தடுப்புத் திட்டத்தின் ஆலோசகர் கவுசல் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இந்தக் குழுவினர் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்குச் சென்று ஆய்வு செய்து வருகின்றனர்.
புதுச்சேரியிலும் டெங்கு காய்ச்சலுக்கு 2,500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர். தற்போது தமிழகத்தில் ஆய்வு செய்து வரும் மத்திய நிபுணர் குழுவினர் புதுவையிலும் டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்காக, சென்னையிலிருந்து பேராசிரியர் அசுதோஷ் பிஸ்வாஸ், இணை இயக்குநர் கல்பனா பர்வா ஆகியோர் சனிக்கிழமை இரவே புதுவை வந்தனர். அவர்களுடன் தமிழ்நாடு குடும்பம் - நலவழித் துறையின் மண்டல முதுநிலை இயக்குநர் ரோஷ்னி ஹார்த்தரும் வந்தார். சேலத்தில் ஆய்வு செய்துவிட்டு, மத்தியக் குழுவில் இடம் பெற்றுள்ள மற்ற 3 பேரும் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரி வருகின்றனர்.
தொடர்ந்து, அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ண ராவ், ஷாஜகான், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா மற்றும் அரசுச் செயலர்கள், சுகாதாரத் துறை இயக்குநர், அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் உள்ளிட்டோர் பங்கேற்கும் டெங்கு தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெறுகிறது.
இதைத் தொடர்ந்து, பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு நோயாளிகளைப் பார்வையிடுகின்றனர்.