குழந்தை வளர்ப்பிலிருந்து பாலின சமத்துவத்தை கற்பிக்க வலியுறுத்தல்
By புதுச்சேரி, | Published on : 16th October 2017 08:41 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
குழந்தை வளர்ப்பில் இருந்து பாலின சமத்துவத்தை கற்பிக்க வேண்டும் என அரசு சார்பு செயலரும், மகளிர், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநருமான யஷ்வந்தையா வலியுறுத்தினார்.
அதேகொம் பின்னகமும் அடைவு பதிப்பகம் சார்பில் பாலினச் சமத்துவம் (திருமணமான பெண்களுக்கான பயிற்சிக் கையேடு) நூல் வெளியீட்டு விழா உழவர்கரையில் சனிக்கிழமை நடைபெற்றது.
நூலை வெளியிட்டு பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டுத்துறை இயக்குநர் யஷ்வந்தையா பேசியதாவது: மாநில அரசு மூலமாகவும் மத்திய அரசு மூலமாகவும் பெண்கள், குழந்தைகளுக்கான திட்டங்கள் கொண்டு வரப்படுகின்றன.
அரசாங்கம் எடுத்து நடத்த வேண்டிய இதுபோன்ற முக்கியமான பாலின சமத்துவக் கருத்துகளை இதுபோன்ற சமூக தன்னார்வ நிறுவனங்களும் செய்து கொண்டு வருகின்றன.
பாலின சமத்துவம் என்கிற இந்த கையேட்டில் 37 தலைப்புகளில் வெவ்வேறு கோணங்களில் ஆண் பெண் பாகுபாட்டிற்கான செயல்களை ஆசிரியர் எடுத்துக் கூறியுள்ளார். ஆண் பெண் பாகுபாடு என்பது நாம் அவர்களுக்கு கொடுக்கும் உணவிலிருந்தே தொடங்குகிறது.
பெண்கள் அனைத்து வேறுபாடுகளையும் தகர்த்து முன்னேற வேண்டுமென்றால் கல்வி தான் பெண்களுக்கு சிறந்த வழி. மேலும் குழந்தை வளர்ப்பிலிருந்து பாலின சமத்துவம் கற்பிக்கப்பட வேண்டும். அப்போதுதான் சமூகத்தில் பாலின சமத்துவம் நிலவும் என்றார்.
நூலை அறிமுகம் செய்த ஆவணப்பட இயக்குநர் கீதா இளங்கோவன் பேசுகையில், பாலின சமத்துவம் பற்றிய பயிற்சிகளை நடத்தும் போது நாம் குடும்பத்திற்குள் ஆண் பெண் எவ்வாறு சமத்துவமாக நடந்துகொள்ள வேண்டும். குழந்தை வளர்பில் ஆண் பெண் சமத்துவம் பற்றிய கருத்துகளை கூறுவது மிக முக்கியம்.
இந்த நூலில் இதுபோன்ற கருத்துகள் கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் சமத்துவம் என்றால் என்ன. பாகுபாடு என்றால் என்ன என்பதனை இந்த நூல் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
தொழில் அடிப்படையிலும் நம் சிந்தனைக்கு ஆண் பெண் வித்தியாசம் தோன்றுகிறது. உதாரணமாக விவசாயி என்றவுடன் நம் சிந்தனைக்கு வருவது ஆண் ஆகவும். செவிலியர் என்றால் நம் சிந்தனைக்கு வருவது பெண் ஆகவும் இருக்கிறது. எனவே இது போன்ற சிந்தனைகளை மாற்ற வேண்டும் என்றார்.
எழுத்தாளர்கள் சாலைசெல்வம், ஓவியா சிறப்புரை ஆற்றினர்.
நூலாசிரியர் அருணா ஏற்புரை ஆற்றினார். அதேகொம் பின்னக நிர்வாக இயக்குநர் ப. லலிதாம்பாள் தலைமை வகித்துப் பேசினார். வழக்குரைஞர் சீனு பெருமாள் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர் ஜோதிபாஸ் நன்றி கூறினார்.