Enable Javscript for better performance
டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம்: மத்தியக் குழு தலைவர்- Dinamani

சுடச்சுட

  

  டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்கள் ஒத்துழைப்பும் அவசியம்: மத்தியக் குழு தலைவர்

  By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  டெங்கு பாதிப்பைக் கட்டுப்படுத்த பொதுமக்களின் ஒத்துழைப்பும் அவசியம் என்று, புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழுவினர் தெரிவித்தனர்.
   தமிழகம், புதுவையில் டெங்கு பாதிப்பு கடுமையாகி வருகிறது. இந்த நிலையில், டெங்கு பாதிப்பு குறித்து ஆய்வு செய்ய மத்திய நிபுணர் குழு கடந்த 13-ஆம் தேதி சென்னை வந்தது.
   தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவத் துறை பேராசிரியர் அசுதோஷ் விஸ்வாஸ், தேசிய தொற்றுநோய் தடுப்புத் திட்டத்தின் இணை இயக்குநர் கல்பனா பரூவா, தில்லி கே.எஸ்.சி.எச். மருத்துவமனையின் குழந்தைகள் நலத் துறை இணை பேராசிரியர் சுவாதி துப்ளிஷ், பூச்சியல் வல்லுநர் வினய் கார்க் மற்றும் தேசிய தொற்றுநோய் தடுப்பு திட்டத்தின் ஆலோசகர் கௌசல் குமார், தமிழக குடும்ப நலத் துறை மண்டல முதுநிலை இயக்குநர் ரோஷிணி ஆர்தர் ஆகியோர் இடம் பெற்றுள்ள இந்தக் குழு தமிழகத்தில் ஆய்வை முடித்துக் கொண்டு ஞாயிற்றுக்கிழமை புதுவையில் ஆய்வு செய்தது.
   புதுவையிலும் டெங்கு காய்ச்சலுக்கு 2500-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
   ஆய்வின் ஒரு பகுதியாக தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடி கிருஷ்ணாராவ், ஷாஜஹான், லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ., தலைமைச் செயலாளர் மனோஜ் பரிதா, அரசுச் செயலாளர்கள் கந்தவேலு, மிகிர்வரதன், சுந்தரவடிவேலு, மாவட்ட ஆட்சியர் இ.வல்லவன், ஜிப்மர் இயக்குநர் எஸ்.சி.பரிஜா, சுகாதார இயக்குநர் கே.வி.ராமன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
   டெங்கு பாதிப்பை குறைக்கும் வகையில் மாநில அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் தொடர்பாக மத்தியக் குழுவிடம் அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் எடுத்துக் கூறினர். மேலும், தடுப்பு நடவடிக்கைகளுக்குத் தேவையான நிதியுதவி, மருத்துவ உபகரணங்கள் வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
   சமூகத்தின் ஒத்துழைப்பு அவசியம்: பின்னர், மத்தியக் குழுவின் தலைவர் கல்பனா பரூவா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   தமிழகம், புதுவையில் டெங்கு காய்ச்சலால் ஏராளமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலுக்கு என தனியாக மருந்து எதுவும் இல்லை.
   மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் ஜே.பி. நட்டா டெங்கு பாதிப்பு தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கை, வழிமுறைகள் குறித்து அனைத்து மாநில தலைமைச் செயலாளர்கள், முதன்மைச் செயலாளர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை அளித்துள்ளார்.
   அரசே டெங்கு பாதிப்பை கட்டுப்படுத்த முடியாது. இதில் சமூகத்தின் ஒத்துழைப்பும் மிகவும் அவசியமாகும்.
   ஒவ்வொருவரும் தங்களது சுற்றுப்புறத்தை மட்டுமாவது தூய்மையாக பராமரிக்க வேண்டும்.
   டெங்கு பாதிப்பை தடுக்க கேட்டுள்ள நிதியுதவியை மத்திய அரசு முடிவு செய்து வழங்கும். மேலும், தொழில்நுட்ப உதவியும் மத்திய சுகாதாரத் துறை வழங்கும்.
   புதுவையில் உள்ள அரசு மருத்துவமனைகள், டெங்கு நோயாளிகள், அதிகளவில் டெங்கு பாதிப்பு ஏற்பட்டுள்ள இடங்களைப் பார்வையிட்டு பின்னர் அறிக்கை தயாரித்து மத்திய அரசுக்கு அளிப்போம் என்றார் அவர்.
   பின்னர், மத்தியக் குழுவினர் அரசு பொது மருத்துவமனை, ராஜீவ் காந்தி மகப்பேறு மருத்துவமனை, ஜிப்மர், ஆரம்ப சுகாதார நிலையங்கள், சமுதாய நலவழி மையம் ஆகியவற்றுக்குச் சென்று ஆய்வு செய்தனர்.
   அங்கு டெங்குவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை சந்தித்து நலம் விசாரித்தனர். மருத்துவ ஆய்வகத்தையும் பார்வையிட்டு சோதனை செய்தனர்.
   டெங்கு நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை குறித்து மருத்துவக் கண்காணிப்பாளர் மோகன்குமார் மற்றும் மருத்துவர்கள் விவரித்தனர்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai