சுடச்சுட

  

  நலத் திட்ட கோப்புகள் எதுவும் ஆளுநர் மாளிகையில் இல்லை: கிரண் பேடி

  By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகையில் மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகள் எதுவும் இல்லை. அப்படி வரும் கோப்புகள் அனைத்தும் உடனுக்குடன் அனுப்பப்படுகின்றன என துணைநிலை ஆளுநர் கிரண் பேடி தெரிவித்தார்.
   இந்திரா நகர் தொகுதியைச் சேர்ந்த நபரிடம் இருந்து ஆளுநர் மாளிகைக்கு வந்த இ-மெயிலில் காசநோய் மருத்துவமனை ஊழியர் குடியிருப்பு 60 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு தற்போது மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. இதை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.
   இதையடுத்து, கோரிமேட்டில் உள்ள காசநோய் மருத்துவமனை ஊழியர் குடியிருப்புப் பகுதியில் ஆளுநர் கிரண் பேடி ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
   அப்போது, அப்பகுதியில் கொட்டப்பட்டுள்ள குப்பைகள், கழிவுநீர் வாய்க்கல், சேதமடைந்த கட்டடங்களை அதிகாரிகளுடன் பார்வையிட்ட அவர், உடனடியாக கழிவுநீர் வாய்க்காலை சுத்தப்படுத்தவும், குப்பைகளை அகற்ற உள்ளாட்சித் துறை, பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
   இதற்கு பதிலளித்து காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி கோவிந்தராஜன் கூறியதாவது: காசநோய் மருத்துவமனை தனியான இடத்தில் கட்டப்பட்டது. ஆனால் மக்கள்தொகை பெருக்கத்தால் தற்போது நகரின் மையப் பகுதி போல் மாறி விட்டது. தற்போது அங்குள்ள 42 குடியிருப்புகளில் வெறும் 10 குடியிருப்புகள் மட்டுமே வசிக்கும் இடங்களாக உள்ளன. பயன்பாட்டில் இல்லாத குடியிருப்புகளை இடித்து இங்கு தொற்று நோய் மருத்துவமனை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், புதுவையில் தனியாக மனநல மருத்துவமனை இல்லாத நிலையில், நோயாளிகளை சென்னை அல்லது பெங்களூருவுக்கு அனுப்பி சிகிச்சை பெறவும், மனநல பாதிப்பு சட்டத்தின்படி சான்றிதழ் பெறவும் அனுப்ப வேண்டியுள்ளது. குடியிருப்புகளை இடித்து விட்டு மனநல மருத்துவமனையும் கட்டலாம்.
   இது நீண்ட கால நோக்கில் செய்ய வேண்டும். உடனடியாக இதற்கு மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும்.
   பொதுப்பணித்துறை, உழவர்கரை, புதுச்சேரி நகராட்சி அதிகாரிகள் இணைந்து எங்கே பிரச்னைகள் உள்ளன என ஆராய்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். குடியிருப்போர் சங்கத்தையும் இதில் ஈடுபடுத்த வேண்டும் என்றார்.
   அவருடன் பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர் சண்முகசுந்தரம், உழவர்கரை நகராட்சி ஆணையர் ரமேஷ், தனிச் செயலர் ஸ்ரீதரன், ஆய்வாளர் பாஸ்கரன், பாதுகாப்பு அதிகாரி கார்த்திகேயன் உடனிருந்தனர்.
   பின்னர், செய்தியாளர்களிடம் கிரண் பேடி கூறியதாவது:
   மக்கள் நலத் திட்டங்கள் தொடர்பாக கோப்புகள் ஆளுநர் மாளிகையில் தேங்கிக் கிடப்பதாக கூறுவது தவறு. என்னிடம் எந்தக் கோப்புகளும் இல்லை. அனைத்து கோப்புகளும் அனுப்பப்பட்டு விட்டன என்றார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai