சுடச்சுட

  

  15-ஆவது மத்திய நிதி ஆணையத்தில் புதுவை சேர்ப்பு: முதல்வர் நாராயணசாமி தகவல்

  By  புதுச்சேரி,  |   Published on : 16th October 2017 08:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  15-ஆவது மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரி மாநிலம் சேர்க்கப்பட்டுள்ளதாக முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.
   புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் அவர் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   மத்திய பாஜக ஆட்சியில் அகில இந்திய அளவில் பொருளாதாரம் 7.7 சதவீதத்திலிருந்து 5.7 சதவீதமாகக் குறைந்துள்ளது. அதிலும் அதன் உண்மையான சதவீதம் 3.7 ஆகும். சரக்கு, சேவை வரியால் விவசாயத் துறையில் வளர்ச்சி குறைந்துள்ளது, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன.
   ஜிஎஸ்டியால் அனைத்துத் தரப்பினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இஸ்லாமியர்கள் ஹஜ் புனிதப் பயணம் செல்வதற்கான அரசின் சலுகைகளை ரத்து செய்வோம் என்ற மத்திய சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் முடிவை ஏற்றுக் கொள்ள முடியாது.
   புதுச்சேரியிலிருந்து பெங்களூரு, திருப்பதி, கொச்சி, கோவை ஆகிய இடங்களுக்கு உடான் திட்டத்தில் விமான சேவை தொடங்க மத்திய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சரிடம் கேட்டுக் கொண்டேன். அதற்கு அமைச்சர் ஒப்புதல் அளித்துள்ளார். மேலும், புதுச்சேரி விமான நிலைய விரிவாக்கத்துக்குத் தேவையான நிலத்தை தமிழகத்திடம் இருந்து பெற்றுத் தருவதாகவும் கூறியுள்ளார்.
   தில்லியில் நடைபெற்ற ஆளுநர்கள் மாநாட்டில் ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் மாநில அரசோடு ஒத்துழைத்து மத்திய அரசுக்கு பாலமாக இருக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் அறிவுறுத்தினர். மத்திய அரசுக்கு பாலமாக உள்ள ஆளுநர்கள், துணைநிலை ஆளுநர்கள் பாலமாக இருக்க வேண்டுமே தவிர, அந்தப் பாலம் பழுதடைந்த பாலமாக இருக்கக் கூடாது.
   மத்திய நிதி ஆணையத்தில் புதுச்சேரியை சேர்க்க வலியுறுத்தி வந்தோம். அதற்கு அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய நிதி அமைச்சர் கூறியிருந்தார். பின்னர் அரசாணை பிறப்பித்து புதுவையை இணைக்கலாம் எனக் கேட்டுக் கொண்டோம். நிதி ஆணையத்தில் புதுவை இல்லாததால் மத்திய அரசின் நிதியுதவியை பெற முடியவில்லை. மேலும், இதர மாநிலங்களுக்கு 42 சதவீதம் வரை நிதி உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால், புதுவைக்கு கடந்த 5 ஆண்டுகளாக 27 சதவீதம் அளவே நிதி தரப்படுகிறது. அந்த இழப்பையும் ஈடுகட்ட வேண்டும் என கேட்டுக்கொண்டோம். தற்போது, 15-ஆவது மத்திய நிதி ஆணையத்தில் புதுவையை இணைப்பதற்கான வரையறைகள் ஏற்கப்பட்டுள்ளன. இதனால், மற்ற மாநிலங்களுக்கு கிடைக்கும் 42 சதவீத மானியத் தொகை கிடைக்கும்.
   ஜிஎஸ்டி வரி விதிப்பால் புதுவைக்கு மாதம்தோறும் ரூ.40 கோடி வரை இழப்பு ஏற்படுகிறது. இதில் ஜூலை மாதத்தில் ஏற்பட்ட இழப்புத் தொகையை மத்திய அரசு தந்துள்ளது என்றார் நாராயணசாமி.
   பேட்டியின் போது, அமைச்சர் கந்தசாமி, எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், ஜெயமூர்த்தி, அனந்தராமன், விஜயவேணி ஆகியோர் உடனிருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai