சுடச்சுட

  

  தீபாவளி பண்டிகை: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

  By DIN  |   Published on : 18th October 2017 12:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி துணை நிலை ஆளுநர், முதல்வர், அமைச்சர்கள், பல்வேறு தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி: தீபங்களின் விழா எனப்படும் தீபாவளி இந்திய மக்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. தீய சக்திகள் மீதான கடவுளின் வெற்றி, தர்மத்தின் வெற்றியை பறைசாற்றுகிறது. நல்ல செயல்கள் மூலம் நமது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்படுவதை தீபாவளி குறிக்கிறது. இந்த தீபஒளி திருநாள் பொதுமக்களின் வாழ்வில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், வளத்தை கிடைக்கச் செய்ய வேண்டும். புதுவை மாநில மற்றும் ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கும் தீபாவளி வாழ்த்துகள்.
  முதல்வர் நாராயணசாமி:
  தீயவை அகன்று நல்லவை நிகழ நாட்டு மக்கள் தீபஒளி ஏற்றி மிக விமரிசையாகக் கொண்டாடப்படும் பண்டிகை தீபாவளியாகும். இத்திருநாளை சிறிய மாநிலமான புதுச்சேரியில் ஏழை, பணக்காரர் என்ற வித்தியாசமில்லாமல் கொண்டாடி மகிழ்வர். மாநிலத்தில் உள்ள அனைத்துத் தரப்பினரின் வாழ்க்கை வளம் பெற வேண்டும் என நாம் ஒருங்கிணைந்து பாடுபடும் இந்த வேளையில், மக்கள் நலத் திட்டங்களை முடக்க சில சக்திகள் செயல்படுகின்றன. அந்த தடைகளை களைந்து மாநிலத்தில் வளர்ச்சி பெறுவோம் என்ற சூளுரையை இந்த நாளில் நாம் அனைவரும் ஏற்போம்.
  சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கம்: தீபாவளி திருநாளில் வீடுகளில் ஏற்றும் தீப ஒளி, நமது உள்ளத்திலும் ஏற்பட வேண்டும். அதாவது நமது மனதில் உள்ள இருள் என்னும் தீமைகள் ஒழிந்து, வெளிச்சம் எனும் நன்மைகள் ஏற்பட வேண்டும். தீமையையும், அதர்மத்தையும் அழித்து நன்மையையும், தர்மத்தையும் நிலைநாட்டும் வலிமையும் கிடைக்க வேண்டும். இத்தீபாவளித் திருநாள் புதுச்சேரி யூனியன் பிரதேச மக்கள் அனைவருக்கும் ஆரோக்கியமான உடல் நலம், செல்வம், அறிவு, மகிழ்ச்சி ஆகியவைகளை கொண்டுவருவதாக அமையட்டும்.
  வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜஹான்: உலக மக்களை ஒன்றிணைக்கும் தீபத்திருநாளாம் இந்த நன்னாளில் கடந்த கால கசப்பான எண்ணங்கள் புஸ்வாணம் போல அகன்று, இனிமையான மத்தாப்பு போல் வண்ணங்கள் வாழ்வில் ஒளிவீசட்டும். புதுவை வாழ் மக்களின் உள்ளங்களிலும் அவர்கள் இல்லங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் தீப ஒளியாய்ப் பரவட்டும். மக்கள் அடிப்படைத் தேவைகள் நிறைவேறி வாழ்வாதாரம் உயர்ந்து தீமைகள் அகன்று புதுவை மாநில மக்கள் வாழ்நாளில் நன்மைகள் பெருக வாழ்த்துகள்.
  நலத்துறை அமைச்சர் மு.கந்தசாமி: தீப ஒளித்திருநாளாம் தீபாவளிப் பண்டிகையை மொழி, மத, இன வேறுபாடின்றி சகோதரத்துவ மனப்பான்மையுடன் கொண்டாடி மகிழ்வோம். நாட்டின் முன்னேற்றத்துக்கும், மாநில வளர்ச்சிக்கும், முதுகெலும்பாய் விளங்கும் விவசாயிகள், தொழிலாளர்கள், மீனவர்கள், கட்டுமான தொழிலாளர்கள், வியாபாரிகள் என அனைவருக்கும் தீபாவளி திருநாள் வாழ்த்துகள்.
  ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.பி.: இந்திய கலாச்சாரத்தோடு பின்னிப்பிணைந்த  இந்த தீப ஒளித்
  திருநாளில் வாழ்வில் சூழ்ந்த இருள் விலகிட அனைவரது இல்லங்களிலும் தீமை எனும் இருள் அகற்றி நன்மை எனும் ஒளி தீபத்தை ஏற்றுவோம்.   
  மத, இன, மொழி வேறுபாடுகளைக் கடந்து, சமத்துவம், சகோதரத்துவம் போற்ற  இந்நாளில் சபதமேற்போம் .  நம் இன்னல்கள் அகல, நம் எதிர்கால புதுச்சேரி வளமாக, இந்த நன்னாளை நம்பிக்கை தீபாவளியாக இனிதே கொண்டாடி மகிழ்வோம்.
  அரசுக் கொறடா அனந்தராமன்: தீமை அழிந்து நன்மை வென்றதின் அடையாளமாக தீபாவளித் திருநாள் ஆண்டுதோறும் நாட்டு மக்களால் எழுச்சியோடும், மகிழ்ச்சியோடும் கொண்டாடப்படுகிறது. தீப ஒளியானது இருளை விலக்கி வெளிச்சத்தை அளிப்பதைப் போல் மக்களிடையே வறுமை, இல்லாமை , ஏற்றத்தாழ்வு போன்ற இருள்கள் நீங்கி அனைவரும் அனைத்து வளமும் பெற்றிட வேண்டும்.
  கோகுலகிருஷ்ணன் எம்.பி.: நல்ல எண்ணங்கள் என்ற தீபத்தை ஏற்றி இருள் என்ற தீமையை அழிப்பதே தீபாவளியாகும். மக்களுக்கு துன்பம் தந்த நரகாசூரனை திருமால் அழித்தார். அதுபோல் நமக்கு துன்ம் விளைவிக்கும் அறியாமை, இயலாமை, பொறாமை, சூழ்ச்சி, சினம் போன்ற அகறவும், ஒளிமயமான, வண்ணமயமான எதிர்காலம் பிறக்க இத்திருநாளில் பிரார்த்திப்போம்.
  அன்பழகன் எம்.எல்.ஏ.:  காலம் தொட்டு கொண்டாடப்படும் தீபாவளி திருநாளில், மனமாட்சியங்களை மறந்து உற்றார், உறவுகள் அனைவரும் இணைந்து கொண்டாடப்படும் இந்நாளில் அனைவரின் இதயங்களிலும் மகிழ்ச்சி ஒளியாக ஒளிர வாழ்த்துகள்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai