சுடச்சுட

  

  புதுச்சேரியில் வெடிகுண்டு வீசி 3 ரௌடிகள் கொலை

  By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 09:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் வியாழக்கிழமை ரெüடிகளிடையே ஏற்பட்ட மோதலில் 3 பேர் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்யப்பட்டனர். இருவர் காயமடைந்தனர்.
   புதுச்சேரி அருகேயுள்ள முத்தரையர்பாளையம் ஜீவா நகரைச் சேர்ந்தவர் ஞானசேகர் (24). காந்திதிருநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ் (23), சண்முகாபுரம் அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு (24). இவர்கள் மூவரும் ரௌடிகள்.
   தீபாவளியையொட்டி இவர்களும், சக நண்பர்களான மேட்டுப்பாளையம் சாணரப்பேட்டையைச் சேர்ந்த புளியங்கொட்டை ரங்கராஜன் (25), ரகு, மாது ஆகியோரும் புதன்கிழமை நள்ளிரவு மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் தெருவில், குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு பீரோ தயாரிப்பு ஆலையின் காலியிடத்தில் ஒன்றாக அமர்ந்து மது அருந்தினர்.
   அப்போது, அங்கு வந்த ஒரு கும்பல் ஆலையை சுற்றி வளைத்து, ஞானசேகர் உள்ளிட்டோரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. இதில், ஜெரால்டு தலை சிதறி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இதனால், அதிர்ச்சியடைந்த மற்றவர்கள் அங்கிருந்து தப்பிக்க முயல்வதற்குள், அந்தக் கும்பல் உள்ளே புகுந்து அவர்களைஅரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில், ஞானசேகர், சதீஷ் ஆகிய இருவரும் அங்கேயே உயிரிழந்தனர். புளியங்கொட்டை ரங்கராஜன், ரகு, மாது ஆகியோர் காயங்களுடன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அவர்களை விரட்டிச் சென்றபடியே அந்தக் கும்பல் தலைமறைவானது. வெடிகுண்டு சப்தம் கேட்டு அக்கம்பக்கத்தில் வசித்த குடியிருப்புவாசிகள் அதிர்ச்சியடைந்து வீட்டின் கதவுகளை மூடிக் கொண்டனர்.
   தகவல் அறிந்த மேட்டுப்பாளையம் காவல் ஆய்வாளர் தங்கமணி, உதவி ஆய்வாளர் இனியன் தலைமையிலான போலீஸார் கொலை நடந்த இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி சடலங்களை மீட்டு உடல் கூறு ஆய்வுக்காக, புதுவை கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
   வழியில் காயமடைந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த புளியங்கொட்டை ரங்கராஜன், ரகு ஆகிய இருவரையும் அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். முதுநிலை காவல் கண்காணிப்பாளர் சந்திரன், கண்காணிப்பாளர் ரஹீம் உள்ளிட்டோர் நிகழ்விடத்தை நேரில் பார்வையிட்டு விசாரித்தனர்.
   3 தனிப்படைகள்: இந்தக் கொலை தொடர்பாக சண்முகாபுரம் பாரதிபுரம் வடக்கு பகுதியைச் சேர்ந்த மார்ட்டின், லாரன்ஸ், ஸ்ரீபன் ஆகிய மூவரையும் மேட்டுப்பாளையம் போலீஸார் பிடித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் மார்ட்டின், லாரன்ஸ் இருவரும் சகோதரர்கள் என்பதும், கொலை செய்யப்பட்ட ஞானசேகர் தலைமையிலான கும்பலும், லாரன்ஸ் தலைமையிலான கும்பலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையம் பகுதி கடைகளில் மாமூல் வசூலித்ததாகக் கூறப்படுகிறது.
   அப்போது இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்தது. இதனிடையே, வேறொரு கொலை வழக்கில் சிறையில் இருந்து 3 நாள்களுக்கு முன்பு வெளியே வந்த மார்ட்டினிடம் நடந்த சம்பவங்களை லாரன்ஸ் கூறியதாகத் தெரிகிறது.
   இதுகுறித்து ஞானசேகர், சதீஷ் ஆகியோரிடம் சென்று மார்ட்டின் கேட்டுள்ளார். அப்போது மார்ட்டினை அவர்கள் கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த மார்ட்டின் முந்திக்கொண்டு ஞானசேகர், சதீஷ் உள்ளிட்டோரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக, அருகே தமிழகப் பகுதியில் உள்ள நண்பர்களை வரவழைத்து, இந்த கொலைச்சம்பவத்தை நிகழ்த்தியதாக போலீஸார் கூறுகின்றனர்.
   ஞானசேகர் மீது 2015ஆம் ஆண்டு சுரேஷ் என்பவரை கொலை செய்த வழக்கு நிலுவையில் உள்ளது. ஜெரால்டு, சதீஷ் மீதும் கொலை, அடிதடி மோதல் வழக்குகள் உள்ளன. கொலைக்கான காரணம் குறித்து போலீஸார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai