சுடச்சுட

  

  பேருந்துக் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்: திமுக

  By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் ஏழை மக்களை கடுமையாகப் பாதிக்கும் அரசுப் பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக வலியுத்தியுள்ளது.
   இதுதொடர்பாக புதுவை தெற்கு மாநில திமுக அமைப்பாளர் இரா. சிவா எம்எல்ஏ வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரியில் ஆளும் காங்கிரஸ் அரசு அண்மைக்காலமாக மக்கள் விரோத போக்குடன் செயல்பட்டு வருகிறது. வீட்டு வரி உயர்வு, குடிநீர் வரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு என பலவித வரியை மக்கள் மீது அரசு திணித்து வருகிறது.
   சட்டப்பேரவையிலோ, அமைச்சரவையிலோ இதுபோன்ற முடிவுகளை எடுக்காமல், தன்னிச்சையாக முடிவெடுத்து அறிவித்துள்ளது மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜிஎஸ்டி வரிவிதிப்பால் புதுச்சேரியில் வியாபாரிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
   வியாபாரம் முழுமையாக முடங்கியுள்ளது. தொழிற்சாலைகள் மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தீபாவளியை மகிழ்ச்சியுடன் கொண்டாட முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர்.
   ஆண்டுதோறும் வழங்கப்படும் இலவச சர்க்கரை கூட வழங்கப்படவில்லை. மாதந்தோறும் இலவச அரிசி வழங்க முடியவில்லை. இந்த நிலையில், பண்டிகை தினத்தை கசப்படையச் செய்யும் வகையில், பேருந்துக் கட்டணத்தை 100 சதவீதம் உயர்த்தியுள்ளது.
   முதலமைச்சரோ, அமைச்சரோ இந்த அறிவிப்பை வெளியிடாமல், மக்களின் எதிர்ப்பை சமாளிக்க போக்குவரத்துத்துறை அதிகாரியை வைத்து இந்தக் கட்டண உயர்வை வெளியிடச் செய்துள்ளனர். இந்த கட்டண உயர்வு, ஏழை மக்களை கடுமையாக பாதிக்கும்.
   புதுச்சேரியில் மற்ற மாநிலங்களைவிட டீசல் விலை, உதிரிப்பாகங்கள் விலையும் குறைவு. இருக்கை வரியும் குறைவு. இவ்வளவு சலுகைகள் உள்ள நிலையில் 100 சதவீத கட்டண உயர்வு தேவையற்றது. இந்த பேருந்துக் கட்டண உயர்வை திமுக வன்மையாக கண்டிக்கிறது.
   ஏற்கெனவே ஆட்டோக்களின் கட்டணத்தை உயர்த்த குழு அமைத்து, 3 முறை அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்பட்டு, விவாதிக்கப்பட்டு இறுதியில் யாருக்கும் பாதிப்பின்றி கட்டணம் அறிவிக்கப்பட்டது. அதேபோல, பேருந்துக் கட்டண உயர்வு குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சமாக 20 சதவீத கட்டணத்தை உயர்த்தினால் போதும். பொதுமக்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாக காங்கிரஸ் அரசு திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் போராட்டம் நடத்தவும் திமுக தயங்காது என்பதை எச்சரிக்கையுடன் தெரிவித்துக்கொள்கிறோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai