சுடச்சுட

  

  மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்: பேருந்து உரிமையாளர்கள் சங்கம்

  By  புதுச்சேரி,  |   Published on : 20th October 2017 08:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் 5 ஆண்டுகளுக்குப் பிறகு பேருந்து கட்டண உயர்வு அளிக்கப்பட்டுள்ளதற்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்று பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
   இது குறித்து, புதுச்சேரி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாரதிகண்ணன் வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது: நாடு முழுவதும், டீசல் விலை உயரும்போதெல்லாம், பேருந்துக் கட்டணங்களை உயர்த்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு வருகிறது. புதுவை மாநிலத்தில் 2012-ல் பேருந்துகளுக்கு கட்டண உயர்வு அனுமதிக்கப்பட்டது. அப்போது 1 கிலோ மீட்டருக்கு 40 பைசாகவும், குறைந்த பட்ச கட்டணமாக 10 கி.மீட்டருக்கு ரூ.5-ம் வசூலிக்க அனுமதிக்கப்பட்டது. அப்போது டீசல் விலை ஒரு லிட்டர் ரூ.41.65 ஆக இருந்தது. அதன்பின்னர், 15 நாள்களுக்கு ஒருமுறை விலை நிர்ணயிக்கும் முறை அமலில் இருந்ததால், டீசல் விலை ரூ.59 வரை உயர்ந்துள்ளது.
   இதனால், மோட்டார் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டது. இதனையடுத்து, எங்கள் சங்கம் சார்பில் கடந்த 2 ஆண்டுகளாக கட்டண உயர்வு வேண்டி அரசிடம் கோரிக்கை வைத்தும் அனுமதியில்லை. டீசல் 2012-ஆம் ஆண்டில் இருந்து தற்போது ரூ.59ஆக உயர்ந்து இருப்பதைப்போல், ஆண்டுக்கான காப்பீடு ரூ.30 ஆயிரத்தில் இருந்து ரூ.80 ஆயிரமாகவும், பேருந்து சேசிங் ரூ.12 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாகவும், பேருந்துக் கட்டமைப்பு ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.10 லட்சமாகவும், டயர் ரூ.29 ஆயிரத்தில் இருந்து ரூ.42 ஆயிரமாகவும் உயர்ந்துள்ளது.
   இதன் காரணமாக தற்போது ஒரு பேருந்தை ஒரு கி.மீட்டர் தொலைவு இயக்க ரூ. 85 பைசா செலவாகிறது என்பதை பட்டியலிட்டு வழங்கினோம். மேற்சொன்ன விலை ஏற்றத்தின் காரணமாக மீண்டும் வலியுறுத்தியதை அடுத்து, அரசு பேருந்து கட்டணத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. அதன்படி ஒரு கி.மீட்டருக்கு 75 பைசாவும், குறைந்த பட்ச கட்டணமாக 6 கி.மீட்டருக்கு ரூ.8-ம் என பேருந்து கட்டண உயர்வு அறிவித்துள்ளது.
   அதனால், பேருந்து உரிமையாளர்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 5 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்படும் இந்த பேருந்துக் கட்டண உயர்வுக்கு மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.
   கர்நாடகத்தில் புதுச்சேரியைவிட அதிகமாக கட்டணம் வசூலிக்கப் படுகிறது. தமிழகத்தில் குறைவாக வசூலிக்கப்பட்டாலும், சாதாரண பேருந்துகளை டீலக்ஸ் பேருந்துகள் என்று அறிவித்து கூடுதல் கட்டணம் வசூலிப்பது போன்ற நடவடிக்கைகளை செய்து வருகிறது.
   தமிழகத்தில் கட்டணத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும், அரசுப் பேருந்துகளுக்கு காப்பீடு இல்லை. அரசு பேருந்துக் கழகங்கள் கோடி கணக்கில் நஷ்டத்தில் இயங்கி வருகின்றன. புதுச்சேரி அரசு போக்குவரத்துக் கழகமும் நஷ்டத்தில்தான் இயங்குகிறது. கம்யூனிஸ்ட் ஆட்சி செய்யும் கேரளம் உள்ளிட்ட 2 மாநிலங்களில் கிலோ மீட்டருக்கு ரூ.70 பைசாவுக்கு மேல் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
   புதுச்சேரியில் 246 தனியார் பேருந்துகள் இயக்கப்பட்டாலும், அதில் 50 பேருந்துகள் கட்டண உயர்வு இல்லாததால் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது கட்டண உயர்வு அளிக்கப்பட்டுள்ளதால் அந்த பேருந்துகளும் இயக்கப்படும் என்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai