சுடச்சுட

  

  கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்: ஜிப்மர் தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு

  By  புதுச்சேரி,  |   Published on : 21st October 2017 08:50 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி பல்வேறு போராட்டங்கள் நடத்தப்படும் என ஜிப்மர் மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
   இதுதொடர்பாக அந்த சங்கத்தின் ஆலோசகர் டி.முருகன் வெள்ளிக்கிழமை நிருபர்களிடம் கூறியதாவது: மத்திய அரசு கடந்த 2000-ஆம் ஆண்டு முதல் 4ஆம் நிலை பணிகளை, நிரந்தரமான ஆள்களைக் கொண்டு செய்யாமல், தினக்கூலி ஊழியர்களை பணியமர்த்தி மேற்கொள்ளும் முயற்சியை மேற்கொண்டது. அதனடிப்படையில் ஜிப்மரில் துப்புரவாளர், சலவையாளர் உள்ளிட்ட 4ஆம் நிலை பணிகளை மேற்கொள்ள 800-க்கும் மேற்பட்ட தினக்கூலி ஊழியர்களை பணியில் அமர்த்தியது.
   அவர்கள் 12 ஆண்டுகள் பணி மேற்கொண்டு வந்த நிலையில், 2012ஆம் ஆண்டு திடீரென ஜிப்மர் நிர்வாகம் ஒப்பந்தப் பணி நிறுவனத்தின் கீழ் பணி செய்யுமாறு ஒரு சுற்றறிக்கையை அனுப்பியது.
   இதனையடுத்து அந்த ஊழியர்கள் ஒன்றிணைந்து ஜிப்மர் மருத்துவமனை ஊழியர்கள் சங்கத்தின் துணையுடன் புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையத்தில் தங்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தினர். மேலும், சென்னை மத்திய நிர்வாக தீர்ப்பாணையத்திலும், உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர்.
   ஜிப்மர் தினக்கூலி பணியாளர்கள் அனைவரையும் மத்திய அரசின் தினக்கூலி ஊழியர்களாக மாற்றி, மத்திய அரசு தினக்கூலி ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியத்தை வழங்க வேண்டும் என்றும் புதுச்சேரி உதவி தொழிலாளர் நல ஆணையர் மத்திய தொழிலாளர் அமைச்சகத்துக்கு அறிக்கை அனுப்பினார்.
   அதனடிப்படையில் மத்திய தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகம், சென்னை தொழிலாளர் நல நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதை தொடர்ந்து நடத்தவும் ஆணை பிறப்பித்தது. அந்த வழக்கில் கடந்த ஜூலை 17ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 2012 மார்ச் 3ஆம் தேதி வரை 5 ஆண்டுகள் தினக்கூலி ஊழியர்களாக பணி முடித்திருந்தவர்களை நான்காம் நிலை ஊழியர்களாக பணிமாற்றம் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது. மேலும், தற்போதுள்ள ஊதிய நிலுவைத்தொகையை 2 மாதங்களுக்குள் வழங்க வேண்டும், தவறினால் 7.5 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும் என்றும் கூறியது.
   இந்தத் தீர்ப்பை அமல்படுத்த வலியுறுத்தி 21, 22 தேதிகளில் கோரிக்கை அட்டை அணிந்தும், 23ஆம் தேதி காலை 7.30 முதல் 9.30 வரை கவன ஈர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்த உள்ளோம். அதன்பிறகும் அமல்படுத்தவில்லை என்றால் பணிப் புறக்கணிப்பு போராட்டம் நடத்தப்படும் என்றார் முருகன்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai