சுடச்சுட

    

    புதுவை மாநில அரசின் சார்பு நிறுவனமான பாசிக்கில் பணி புரியும் ஊழியர்கள் சம்பளம் வழங்கக் கோரி,  சனிக்கிழமை வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு, நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    பாசிக்கில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். பாசிக் நிறுவனத்தின் கீழ் காய்கறி அங்காடி, மதுபானம், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் உற்பத்தி நிலையம் ஆகியவை இயங்கி வருகின்றன.
    இந்த நிலையில், பாசிக்கில் பணிபுரியும் ஊழியர்களுக்கு கடந்த 40 மாத காலமாக சம்பளம் வழங்கப்படவில்லை. மேலும் ஊழியர்கள் தங்களைப் பணி நிரந்திரம் செய்யக் கோரி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இதனிடையே, ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவி சாய்க்காததால், அவர்கள் கடந்த 100 நாள்களுக்கும் மேலாக தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக,  பிச்சை எடுக்கும் போராட்டம், ஆயுத பூஜையன்று தங்களுக்கே  பூஜை போடும் போராட்டம் என,  அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நூதன முறையில் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இந்த நிலையில், நிலுவையில் உள்ள  ஊதியத்தை வழங்க வேண்டும், நிரந்த ஊழியர்கள் அனைவருக்கும் 100 சதவீதம் முழு சம்பளம் வழங்க வேண்டும், தினக்கூலி ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி, வறுமையின் காரணமாக தங்களுக்கு பசி எடுக்கக் கூடாது என்பதற்காக வயிற்றில் ஈரத் துணியைக் கட்டிக்கொண்டு பாசிக் தலைமை அலுவலகம் எதிரே படுத்துறங்கும் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    அப்போது அவர்கள் பாசிக் நிர்வாகம், புதுவை அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தங்களுடைய போராட்டம் தொடரும் என பாசிக்  ஊழியர்கள் தெரிவித்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai