சுடச்சுட

  

  புதுவையில் பேருந்துக் கட்டண உயர்வு நிறுத்திவைப்பு: முதல்வர்

  By DIN  |   Published on : 22nd October 2017 05:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் பேருந்துக் கட்டண உயர்வை நிறுத்திவைப்பதாக முதல்வர் வி.நாராயணசாமி தெரிவித்தார். மேலும், பேருந்துக் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அமைச்சர் தலைமையில் குழு அமைத்தும் முதல்வர் உத்தரவிட்டார்.
  புதுவையில் கடந்த 2012-ஆம் ஆண்டு பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில், டீசல் விலை உயர்வு, உதிரிப் பாகங்களின் விலை உயர்வு, ஊதியம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பேருந்துக் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என பேருந்து உரிமையாளர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பேருந்துக் கட்டணத்தை உயர்த்த அரசு முடிவு செய்தது.
  அதன்படி, புதுவை யூனியன் பிரதேசத்தில் இயக்கப்படும் நகரப் பேருந்துகளுக்கு முதல் நிலை ரூ. 5ஆகவும், அதன்பிறகு ஒவ்வொரு நிலைக்கும் ரூ. 2-க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. விரைவு அல்லாத பேருந்துகளுக்கு முதல் 6 கி.மீ. தொலைவுக்கு  ரூ. 8-க்கு மிகாமலும், விரைவுப் பேருந்துகளுக்கு முதல் 25 கி.மீ. தொலைவுக்கு ரூ. 25-க்கு மிகாமலும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இந்தக் கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்தது. இதனால், பொதுமக்கள் பெரும் அதிர்ச்சிக்குள்ளாகினர்.
  கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்தி, பொதுமக்களும்,  அரசியல் கட்சியினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  இந்த நிலையில், பேரவைக் குழு அரங்கில் பேருந்துக் கட்டணத்தைக் குறைப்பது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. முதல்வர் நாராயணசாமி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்துக்கு அமைச்சர்கள் மல்லாடி கிருஷ்ண ராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
  எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், எம்.என்.ஆர்.பாலன், ஜெயமூர்த்தி, சிவா, விஜயவேணி, தீப்பாய்ந்தான், அன்பழகன், பாஸ்கர், தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, போக்குவரத்துத் துறைச் செயலர் சுந்தரவடிவேலு, சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  கூட்டத்தின் முடிவில் முதல்வர் நாராயணசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  புதுவையில் பேருந்துக் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்களும், அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து அனைத்து எம்.எல்.ஏ.க்களும் என்னை சந்தித்துப் பேசினார்கள். இதையடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை அழைத்து பேசி கருத்துகளைக் கேட்டேன்.
  இதுதொடர்பாக அமைச்சர் ஷாஜகான் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் இடம் பெறுவார்கள். இந்தக் குழு பேருந்து உரிமையாளர்கள், அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்து பேசி,  மூன்று மாதத்துக்குள் அறிக்கை சமர்ப்பிப்பார்கள்.
  அந்த அறிக்கையின் அடிப்படையில், புதிய கட்டணத்தை அமல்படுத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதுவரை பழைய கட்டணமே தொடரும்.
  இதற்குப் பேருந்து உரிமையாளர்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என்றார் முதல்வர் நாராயணசாமி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai