சுடச்சுட

  

  பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து அரசியல் கட்சியினர் மறியல்

  By DIN  |   Published on : 22nd October 2017 05:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து அதிமுக, பாஜக கட்சிகள் சார்பில், சனிக்கிழமை சாலை மறியல் நடைபெற்றது. சாலை மறியலில் ஈடுபட்ட 300-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.
  புதுவையில் 5 ஆண்டுகளுக்கு பின்னர் பேருந்துக் கட்டணத்தை உயர்த்தி அரசு அறிவித்தது. குறிப்பாக, 40 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு பொதுமக்கள் மற்றும் பல்வேறு கட்சியினர், அமைப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.
  இதன் தொடர்ச்சியாக
  அதிமுக சார்பில் புதுச்சேரி வெங்கட சுப்பாரெட்டியார் சதுக்கம் அருகே சாலை மறியல் நடைபெற்றது. அந்தக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் குழுத் தலைவர் ஆ.அன்பழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார்.  எம்.எல்.ஏ. பாஸ்கர் முன்னிலை வகித்தார்.
  கட்சியின் மாநிலத் துணைச் செயலர் பன்னீர்செல்வி, நகரச் செயலர்கள் ரவீந்திரன், அன்பானந்தம், அணி செயலர்கள் பாப்புசாமி, ஞானவேல், சுப்பிரமணி, குணசேகர ரெட்டியார், தொகுதிச் செயலர்கள் கிருஷ்ணமூர்த்தி, நாராயணன், ஜானிபாய், மணவாளன், மணி, ஆனந்தன் உள்பட நூற்றுக் கணக்கானோர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
  இதனால், கடலூர் சாலை, மறைமலையடிகள் சாலைகளில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள், வாகன ஓட்டிகள் சாலையில் செல்ல முடியாமல் திண்டாடினர்.
   இதைத் தொடர்ந்து, உருளையன்பேட்டை போலீஸார் சாலை மறியலில் ஈடுபட்ட 2 எம்.எல்.ஏ.க்கள் உள்பட 200-க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர்.
  பாஜக சார்பில் சாலை மறியல், பேருந்துகள் சிறைபிடிப்பு: இதேபோல, பாஜக சார்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் நடைபெற்றது.
  கட்சியின் மாநிலத் தலைவர் வி.சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். பொதுச் செயலர்கள தங்க.விக்ரமன், ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் செல்வம், துரை கணேசன், ஏம்பலம் செல்வம், நாகராஜ் ஜெயந்தி, சிவானந்தம், மோகன்குமார், மூர்த்தி, சக்திபாலன் உள்பட நூற்றுக் கணக்கானோர் மறியலில் கலந்து கொண்டனர். சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் பேருந்துகளை வெளியே செல்லவிடாமல் சிறைபிடித்தனர்.
  இதனால், பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மறியலில் ஈடுபட்ட 125 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  அதிமுக, பாஜக கட்சிகளின் சாலை மறியலால் புதுவையின் மையப் பகுதியில் போக்குவரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
  சோஷலிஸ்ட் யூனிட்டி அமைப்பினர் சாலை மறியல்: இதேபோல, பேருந்துக் கட்டண உயர்வைக் கண்டித்து சோஷலிஸ்ட் யூனிட்டி சென்டர் ஆஃப் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் புதுச்சேரி புதிய பேருந்து நிலையம் எதிரே சாலை மறியல் நடைபெற்றது. அந்த அமைப்பின் மையத் தலைவர்  லெனின் தலைமை வகித்தார். பேருந்து நிலையத்துக்கு எதிர்புறமுள்ள மறைமலை அடிகள் சாலையில் மறியல் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட 20-க்கும் மேற்பட்டோரையும் போலீஸார் கைது செய்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai