சுடச்சுட

  

  பொதுமக்கள் எதிர்ப்பு: ஆய்வைப் பாதியில் நிறுத்திய ஆளுநர்

  By DIN  |   Published on : 22nd October 2017 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அமைச்சர் தொகுதியில் ஆய்வு மேற்கொள்ள இருந்த புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அந்தத் தொகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆய்வைப் பாதியிலேயே நிறுத்திவிட்டுத் திரும்பிச் சென்றார்.
  புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி வார இறுதி நாள்களில் புதுவையின் பல்வேறு பகுதிகளுக்கு நேரடியாகச் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
  அதன்படி சனிக்கிழமை அவர், புதுச்சேரி பாகூர் பகுதியில் உள்ள ஏரி, குளத்தை ஆய்வு செய்தார். அப்போது, நீர் வீணாகக் கடலில் கலப்பதைத் தடுக்க  மறு சீரமைப்பு செய்ய திட்டம் தயாரிக்க வேண்டும் என பொதுப் பணித் துறை அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார். தொடர்ந்து கொமந்தான் மேடு தரைப்பாலத்தை அவர் ஆய்வு செய்தார்.
  தென்பெண்ணை ஆற்றில் வரும் நீர், பாகூர் தொகுதிக்கு உள்பட்ட கொமந்தான் மேடு படுகை அணை சேதமடைந்ததால் அங்கு தேங்காமல் செல்வதாக புகார் வந்ததையடுத்து, அந்தப் பகுதிக்கு கிரண் பேடி சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  அப்போது புகார் தெரிவித்த விவசாயிகளிடம் அவர் விளக்கம் கேட்டறிந்தார். அப்போது, அணைக்கட்டு பணி பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் மழை நீர் வீணாகக் கடலில் கலக்கிறது என விவசாயிகள் தெரிவித்தனர்.
  இதையடுத்து, உடன் வந்த பொதுப் பணித் துறைத் தலைமைப் பொறியாளர் சண்முக சுந்தரத்திடம் விளக்கம் கேட்டார். அப்போது அவர், பாதியளவு வேலைதான் நடைபெற்றது.
  மீதிப் பணியை முடிக்க நபார்டு வங்கியிடம் கடன் கேட்கப்பட்டது. நபார்டு வங்கியும் நிதி தருவதாக ஒப்புக்கொண்டுள்ளது. எனவே, அந்தப் பணி விரைவில் முடிக்கப்படும் என்றார்.
  இதையடுத்து, உடனடியாகப் பணியைத் தொடங்கி முடிக்க வேண்டும் என கிரண் பேடி உத்தரவிட்டார்.
  இந்த ஆய்வின் போது பொதுப் பணித் துறை உதவிப் பொறியாளர் தாமரை புகழேந்தி, மாவட்டத் துணை ஆட்சியர் உதயகுமார், வட்டாட்சியர் கார்த்திகேயன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சவுந்தர்ராஜன் ஆகியோரி உடனிருந்தனர்.
  இதைத்தொடர்ந்து அமைச்சர் கந்தசாமியின் ஏம்பலம் தொகுதிக்கு உள்பட்ட பிள்ளையார்குப்பம் பகுதியில் உள்ள குளத்தையும், நரம்பை கிராமத்தில் ஐ.ஆர்.பி.என். போலீஸாருக்கு ஒதுக்கப்பட்ட இடத்தையும் பார்வையிட கிரண் பேடி திட்டமிட்டிருந்தார்.
  இதையறிந்த பிள்ளையார்குப்பம் பேட் பொதுமக்களும், கிருமாம்பாக்கம் பேட்,  நரம்பை மீனவப் பகுதி பொதுமக்களும் ஆங்காங்கே திரண்டு நலத் திட்டங்கள் தொடர்பான கோப்புகளுக்கு கையெழுத்திடாதது குறித்து ஆளுநர் கிரண் பேடியிடம் கேள்வி எழுப்பவும், அவரைக் கண்டித்து பதாகைகளுடன் நின்று கொண்டிருந்தனர். இதனால், அந்தப் பகுதியில் பதட்டமும், பரபரப்பும் ஏற்பட்டது.
  இதையறிந்த ஆளுநர் கிரண்பேடி அங்கு செல்லும் முடிவைக் கைவிட்டு, தனது ஆய்வுப் பயணத்தைப் பாதியிலேயே முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்குத் திரும்பினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai