சுடச்சுட

  

  மூன்று பேர் கொலையில் விழுப்புரம் ரெளடி கும்பலுக்குத் தொடர்பு

  By DIN  |   Published on : 22nd October 2017 05:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் மூன்று ரௌடிகள் கொலை செய்யப்பட்ட வழக்கில் விழுப்புரத்தைச் சேர்ந்த ரெளடி கும்பலுக்குத் தொடர்பிருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து, கொலையாளிகளை பிடிக்க போலீஸார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
  முத்திரையர்பாளையம் ஜீவா வீதியைச் சேர்ந்தவர் ஞானசேகர் (எ) நாய் சேகர் (24). சண்முகாபுரம் அணைக்கரை வீதியைச் சேர்ந்தவர் ஜெரால்டு (24). முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரைச் சேர்ந்தவர் சதீஷ் (23). ரெளடிகளான மூவரும், மேட்டுப்பாளையம் சாரணப்பேட்டையைச் சேர்ந்த புளியங்கொட்டை ரங்கராஜன் (25), ரகு,  மாது ஆகியோருடன் கடந்த 18-ஆம் தேதி மேட்டுப்பாளையம் ராம்நகர் முதல் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு பீரோ, கட்டில் செய்யும் சிறு தொழிற்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
  அப்போது அங்கு வந்த 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய கும்பல் அந்த தொழிற்கூடத்தைச் சுற்றி வளைத்து, நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. தொடர்ந்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இந்தச் சம்பவத்தில் ஜெரால்டு,  நாய் சேகர், சதீஷ் ஆகிய மூவரும் அதே இடத்தில் உயிரிழந்தனர். ரங்கராஜன் பலத்த காயமடைந்தார். ரகு லேசான காயத்துடனும், மாது காயமின்றியும் தப்பினர்.
  இதுதொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் மார்டின் உள்ளிட்ட சிலர் மீது வழக்குப் பதிவு செய்து கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல் ஆய்வாளர்கள் தங்கமணி, கண்ணன், நாகராஜ் மற்றும் அதிரடிப் படை காவல் ஆய்வாளர்  கார்த்திகேயன் ஆகியோர் தலைமையில் தனிப் படைகள் அமைக்கப்பட்டு, புதுச்சேரி  மற்றும் தமிழகப் பகுதிகளில் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
  இதற்கிடையே விழுப்புரத்தைச் சேர்ந்த ரெளடிக் கும்பலுக்கு இந்தக் கொலையில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகவும்,  விரைவில் கொலையாளிகள் சிக்குவார்கள் எனவும் போலீஸார் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai