சுடச்சுட

  

  அரசு தொடக்கப் பள்ளிகளில் 201 நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் ரத்து: புதுவை ஆளுநர் அதிரடி

  By DIN  |   Published on : 23rd October 2017 06:44 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  குறைந்து வரும் மாணவர் சேர்க்கை எதிரொலியாக புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளிகளில் 201 நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதற்கான உத்தரவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி பிறப்பித்தார்.
  புதுவை அரசுப் பள்ளிக் கல்வித் துறையில் அரசு முன் மழலையர், தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகள், ஜூனியர் காலேஜ், சிறப்புப் பள்ளிகள் என மொத்தம் 710 பள்ளிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
  இவற்றில், புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட 4 பிராந்தியங்களில் 285 முன் மழலையர் பள்ளிகள், 239 தொடக்கப் பள்ளிகள், 49 நடுநிலைப் பள்ளிகள், 74 உயர்நிலைப் பள்ளிகள், 59 மேல்நிலைப் பள்ளிகள், ஒரு ஜூனியர் காலேஜ்,  3 சிறப்புப் பள்ளிகள் அடங்கும்.  
  இந்தப் பள்ளிகளில் 1.10 லட்சம் மாணவர்கள் படித்து வந்த நிலையில், தற்போது மாணவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வருகிறது.
  மாணவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் கீழே சென்றுவிட்டது. அரசு அதிக அளவில் நிதியை ஒதுக்கி, பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. ஆனால், அடிப்படை கல்வி தரமில்லாததால் பொதுத் தேர்வுகளில் அரசுப் பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் சாதிப்பதில்லை.
  இதனால், ஏழை பெற்றோர்களுடம் தங்களது பிள்ளைகளுக்குத் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் தனியார் பள்ளிகளை நாடிச் செல்கின்றனர். இதன் காரணமாக, அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது.
  மாணவர் சேர்க்கையை உயர்த்த கல்வித் துறை பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டும் பலனில்லாமல் போனது.
  புதுவையில் 156, காரைக்காலில் 60, மாஹேயில் 8, ஏனாமில் 15 என மொத்தம் 239 அரசு தொடக்கப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இங்கு மாணவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிந்து வரும் நிலையில், ஆசிரியர் விகிதம் தொடர்ந்து அதிகமாக உள்ளது. குறைந்த மாணவர்களுக்கு ஆசிரியர்கள் அதிகம் உள்ளனர். இது கல்வித் துறைக்கு தொடர்ந்து சுமையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, நிதிச் சிக்கல் உள்ள நிலையில் நிரந்தர ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்ய அரசு முடிவு செய்தது. மொத்தம் 201 தொடக்கப் பள்ளி ஆசிரியர் பணியிடங்களை ரத்து செய்யவும், அதற்கு ஈடாக நிலை - 2 தகுதியுள்ள 201 பாலசேவிகா பணியிடங்களை உருவாக்கவும் ஆளுநர் கிரண் பேடி ஒப்புதல் அளித்தார். அரசின் இந்த நடவடிக்கையால் கல்வித் துறைக்கு ஏற்படும் கூடுதல் நிதிச் சுமை குறையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  தொடக்கப் பள்ளிகளில் 201 நிரந்தர ஆசிரியர் பணியிடங்கள் ரத்தானதால் ஆசிரியர் பயிற்சி முடித்துள்ளோர் அதிர்ச்சிக்கு ஆளாகி உள்ளனர்.  

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai