சுடச்சுட

  

  புதுவை அருகே உள்ள பூத்துறை அரவிந்தர் ஆசிரம இயற்கை விவசாயப் பண்ணையில் துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஞாயிறறுக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
  அரவிந்தர் ஆசிரம பள்ளிக்கு சனிக்கிழமை சென்று பார்வையிட்ட கிரண் பேடி பூத்துறையில் உள்ள இயற்கை விவசாயப் பண்ணையைப் பார்க்க முடிவு செய்தார்.
  இதையடுத்து,  ஞாயிற்றுக்கிழமை அவர் இயற்கை விவசாயப் பண்ணைக்கு சென்று பார்வையிட்டார். அங்கு மறு சுழற்சி முறையில் உரங்கள் தயாரிக்கப்படுவதையும்,  அதன் மூலம் வேளாண் உற்பத்தி நடைபெறுவதையும் பார்த்த கிரண் பேடி, இது உண்மையில் இயற்கையையும், மனிதனையும் ஒருங்கிணைக்கும் செயல் என்று பாராட்டினார்.
  பின்னர் அவர் கூறியதாவது: ஆசிரம விவசாயப் பண்ணையில், இருக்கும் பொருள்களைக் கொண்டு, இயற்கையான முறையில் ஆசிரம மாணவர்கள் வேளாண்மை செய்து வருகின்றனர்.  இந்தப் பண்ணை ஆசிரம மாணவர்களுக்கு மட்டுமின்றி, இயற்கை வேளாண்மையைக் கற்றுக் கொள்ள விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் ஏற்றது. புதுச்சேரி விவசாயிகளும் இங்கு வந்து கற்றுக் கொள்ள வேண்டும். இயற்கையான முறையில், வேளாண்மை செய்வது எப்படி என்பதை கற்றுக் கொடுக்கும் இடமாக ஆசிரம இயற்கை விவசாயப் பண்ணை உள்ளது.
  ஏற்கெனவே வேளாண் துறை அமைச்சர் கமலக்கண்ணனும், அதிகாரிகளும் இங்கு வந்து பார்வையிட்டு இயற்கை விவசாயத்தை அறிந்து கொள்ள நடவடிக்கை எடுத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. மேலும், வேளாண் துறைச் செயலர்,  அத்துறையின் முக்கிய அதிகாரிகளும் இங்கு வந்து பார்வையிட்டு, இயற்கை விவசாயம் குறித்து நடைமுறை அறிவைப் பெற வேண்டும் என்றார் அவர்.
  இந்த ஆய்வின் போது,  ஆளுநரின் தனிச் செயலர் ஸ்ரீதரன், சிறப்புப் பணி அதிகாரி அம்ருதா, பாதுகாப்பு அதிகாரி கார்த்திகேயன் உடன் சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai