Enable Javscript for better performance
தீபாவளி எதிரொலி: புதுவையில் காற்று, ஒலி மாசு அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி எதிரொலி: புதுவையில் காற்று, ஒலி மாசு அதிகரிப்பு

    By DIN  |   Published on : 24th October 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளி பண்டிகை எதிரொலியாக புதுவையில் காற்று, ஒலி மாசு அதிகரித்துள்ளது என மாசுக்கட்டுப்பாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை தகவல் தெரிவித்தது.
    புதுச்சேரி அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    ஒவ்வொரு ஆண்டும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் தீபாவளி பண்டிகை அன்று வெடிக்கப்படும் வெடிகளால் ஏற்படும் விளைவுகளை ஆய்வு செய்து வருகிறது.
    இந்த ஆண்டும் புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம், சாதாரண நாள்களிலும் (அக்.12) மற்றும் தீபாவளி பண்டிகை அன்றும் (அக்.18) வெடிக்கப்படும் பட்டாசினால் ஏற்படும் சுற்றுச்சூழல் விளைவுகளை கண்டறிய காற்று மற்றும் ஒலி மாசுவை ஆய்வு செய்தது.
    ஒலி மாசு ஆய்வறிக்கையின்படி, சாதாரண நாள்களில் ஒலியோடு (63.9 டெசிபல்) ஒப்பிடுகையில், தீபாவளி தினத்தின் (82.8 டெசிபல்) ஒலி அளவு அதிகரித்துள்ளது.
    தீபாவளி அன்று பட்டாசு வெடித்ததே இந்த ஒலியின் அளவு அதிகரித்ததற்கான காரணமாகும். சாதாரண நாள்களின் ஒலியின் அளவு இரு சக்கர வாகன போக்குவரத்து செயல்களினால் ஏற்பட்டது. இருந்தபோதிலும் கண்டறியப்பட்ட பட்டாசு வெடியின் ஒலி உச்ச நீதிமன்ற ஆணையின் அளவிற்குள் (125 டெசிபல்) உள்ளது.
    தீபாவளி அன்று பட்டாசு வெடிப்பதினால் காற்றில் மாசின் அளவுகளில் ஏற்படும் விளைவுகளை புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டுக் குழு ஆய்வு செய்து வருகிறது.
    ஆய்வறிக்கையின் படி, புதுச்சேரியில் 24 மணி நேரம் ஆய்வு செய்ததில் காற்றில் நுண்துகள் சாதாரண நாள்களைவிட (73 மைக்ரோ கிராம்) தீபாவளி அன்று (180 மைக்ரோ கிராம்) அதிகமாக இருந்தது தெரிய வந்துள்ளது.
    நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு (100 மைக்ரோ கிராம்) சற்று அதிகமாக இருந்தது.
    காரைக்காலில் சாதாரண நாளில் 35 மைக்ரோ கிராம் ஆகவும், தீபாவளி அன்று 62 மைக்ரோ கிராம் ஆகவும் கண்டறியப்பட்டது. நுண்துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு 100 மைக்ரோ கிராம் இருந்தது. 24 மணி நேரத்திற்கான சல்பர் டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் டை ஆக்ஸைடு ஆகியன நிர்ணயிக்கப்பட்ட அளவிற்குள் (80 மைக்ரோ கிராம்) உள்ளது.
    காற்றின் தரம்: புதுச்சேரியில் காற்றின் தரத்தை ஆய்வு செய்ததில் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு காற்று தர குறியீட்டின் படி காற்று மாசின் அளவு தீபாவளி நாளில் சற்று மிதமான நிலையிலும் சாதாரண நாளில் திருப்திகரமான நிலையிலும் கண்டறியப்பட்டது.
    காரைக்காலில் காற்று தர குறியீட்டின்படி காற்று மாசின் அளவு தீபாவளி நாளில் திருப்திகரமான நிலையிலும், சாதாரண நாளில் நல்ல நிலையிலும் கண்டறியப்பட்டது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai