சுடச்சுட

    

    பரிகார பூஜை செய்வதாகக் கூறி பெண்ணிடம் 36 பவுன் நகை மோசடி: 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது

    By DIN  |   Published on : 24th October 2017 01:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரிகார பூஜை செய்வதாகக் கூறி பெண்ணிடம் 36 பவுன் நகைகளை மோசடியாக பறித்த 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    வில்லியனூர் சிவகணபதி நகரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் ஆனந்தன் (45). கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது. இதனால் அவரது மனைவி பல்வேறு கோயில்களுக்கு சென்று வழிபாடு நடத்தி வந்தார்.
    கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அவர் மைலம் கோயிலுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்துவிட்டு வந்தபோது, அங்கு வந்த சென்னை தாம்பரத்தைச் சேர்ந்த விசாலாட்சி, அவரது கணவர் ஆறுமுகம், உறவினர் அங்காளபரமேஸ்வரி ஆகியோர் ஆனந்தனின் மனைவிடம் பேச்சு கொடுத்துள்ளனர்.
    தனது கணவர் சீக்கிரம் குணமடைய வேண்டும் என சாமி கும்பிட வந்ததாக தெரிவித்துள்ளார். அப்போது அவர்கள் தாங்கள் ஜோதிடர்கள் என்றும் ஆனந்தனுக்கு சில தோஷங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
    தோஷம் கழிக்க ரூ.20,000 கொடுத்தால் உடனே தோஷம் கழிப்பதாகவும் கூறியுள்ளனர். இதனை நம்பிய ஆனந்தனின் மனைவி, பணம் இல்லாததால் தான் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கழட்டி கொடுத்துள்ளார்.
    2 நாள்கள் கழித்து விசாலாட்சி தரப்பினர் ஆனந்தனின் வீட்டிற்கு வந்து பரிகார பூஜைகளை செய்துள்ளனர். அதன்பிறகு அடிக்கடி பூஜைகளை நடத்தி ஆனந்தனின்
    மனைவியிடமிருந்து 36 பவுன் நகைகளை ஏமாற்றி பறித்துள்ளனர். தாலிச் சங்கிலி வரை அந்த மோசடி கும்பலிடம் கொடுத்ததால் ஆனந்தனின் மனைவி மஞ்சள் கயிற்றை கழுத்தில் அணிந்திருந்தார்.
    இதனை கவனித்த ஆனந்தன் தாலிச் சங்கிலி எங்கே என கேள்வி எழுப்பினார். அப்போதுதான் ஆனந்தனின் மனைவி தான் ஏமாந்த விஷயத்தை கணவரிடம் எடுத்துரைத்தார்.
    இதுகுறித்து வில்லியனூர் காவல் நிலையத்தில் ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் வேலையன் வழக்குப் பதிவு செய்து விசாலாட்சி, ஆறுமுகம், அங்காள பரமேஸ்வரி ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai