சுடச்சுட

  

  ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு போன்றவற்றால் புதுச்சேரியில் தீபாவளி விற்பனை கடும் சரிவைச் சந்தித்தது.
  புதுச்சேரியில் நேரு வீதி, அண்ணா சாலை, காந்தி வீதி உள்ளிட்ட பகுதிகள் முக்கிய வணிக மையங்களாக திகழ்கின்றன. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், ரம்ஜான் போன்ற பண்டிகை நாள்களில் துணி வகைகள், இனிப்புகள் போன்றவற்றின் விற்பனை அமோகமாக நடைபெறும்.
  இதற்கிடையே, கடந்த 2016 நவம்பர், 8-ஆம் தேதி உயர்மதிப்பு கொண்ட ரூ.500, ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என பிரதமர் மோடி அதிர்ச்சி அறிவிப்பை வெளியிட்டார். இதனால் பொதுமக்கள் கடும் பாதிப்புக்கு ஆளானார்கள். ஏடிஎம் மையங்கள், வங்கிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து பணத்தை மாற்றவும், பெறவும் செய்தனர். பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் அப்போதே புதுவையில் வியாபாரம் 50 சதவீதத்துக்கு மேல் பாதிக்கப்பட்டது.
  இதற்கிடையே, கடந்த ஜூலை 1-ஆம் தேதி நாடு முழுவதும் ஒரே வரி என ஜிஎஸ்டி சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறையை மத்திய அரசு அமல்படுத்தியது. அனைத்து வணிகர்களும் ஜிஎஸ்டியின் கீழ் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
  ஜிஎஸ்டி வரி விதிப்பால் சிறிய, நடுத்தர, குறுந்தொழில் செய்வோர், சிறிய வியாபாரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
  இந்த நிலையில், பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் புதுவையில் தீபாவளி விற்பனை சரிவடைந்தது.
  வியாபாரிகளுக்கு மந்தமான விற்பனையும், நுகர்வோருக்கு கடுமையான விலை உயர்வும் கொண்டதாகவும் தீபாவளி அமைந்து விட்டது. ஆயத்த ஆடைகள், இனிப்புகள், பலகாரங்கள், பட்டாசுகள், மளிகைப் பொருள்கள் என அனைத்தும் விலை உயர்ந்து விட்டன. இதனால், தங்களது நிதிநிலைக்கு ஏற்ப பொதுமக்கள் வாங்கும் பொருள்கள் அளவை குறைத்துக் கொண்டனர்.
  கடந்த ஆண்டைக் காட்டிலும் விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை சரிவடைந்து விட்டது என வணிகர் பேரவை பொதுச் செயலாளர் பாலு தெரிவித்தார்.
  பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் பொதுமக்களிடம் சேமிப்பு பணம் இல்லாததால் ஆடம்பரமாக செலவழித்தல் நின்று விட்டது. முன்பு தீபாவளியின் போது இரண்டு செட் புத்தாடைகள் வாங்கிய பொதுமக்கள் தற்போது விலையேற்றத்தால் ஒரு செட் ஆடையோடு நிறுத்திக் கொண்டனர்.
  2 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக வரி உயர்ந்ததால் இந்நிலை ஏற்பட்டது. மேலும் ரூ.1000-க்கு மேல் விற்பனை செய்யப்படும் புடவை, சுடிதார், டாப்ஸ், ஜீன்ஸ் உள்ளிட்டவற்றுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. மேலும், சிந்தெடிக், கைத்தறி உற்பத்தித் துணிகளுக்கு 18 சதவீதமாக வரி விதிக்கப்பட்டுள்ளது.
  அதேபோல, ஜிஎஸ்டிக்குப் பின் இனிப்பு வகைகள் விலை கசப்பை தருபவையாக மாறி விட்டன. எப்போதும் ஆகும் இனிப்பு விற்பனை கணிசமாக குறைந்து விட்டது. குறிப்பாக, இனிப்பு வகைகளுக்கு 5 சதவீதம், பலகாரங்களுக்கு 12 சதவீதம் வரி விதிக்கப்பட்டுள்ளது. இனிப்புகளில் பிஸ்தா, கேசர் போன்றவை சேர்த்திருந்தால் அவற்றுக்கு 18 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது.
  மேலும், பட்டாசு வகைகளுக்கு 14.5 சதவீத வாட் வரியில் இருந்து ஜிஎஸ்டி வரி 28 சதவீதமாக விதிக்கப்பட்டதால் கடுமையாக விலை உயர்ந்து விட்டது.
  வழக்கமாக 500 பரிசுப் பெட்டிகளுக்கு ஆர்டர் தருவோர், 200 பெட்டிகளாக குறைத்து விட்டனர். மேலும், தற்போது பட்டாசு வகைகளை வாங்குவதையும் தவிர்த்து விட்டனர்.
  தீபாவளி விற்பனை கடுமையாக சரிந்ததால் தேக்கமடைந்துள்ள சரக்கு இருப்பை வைத்துக் கொண்டும் என்ன செய்வதென்று தெரியாமல் வியாபாரிகள் தவித்து வருகின்றனர். மொத்தத்தில் பணமதிப்பிழப்பு, ஜிஎஸ்டியால் வியாபாரிகளும், நுகர்வோரும் கடும் பாதிப்பை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai