சுடச்சுட

  

  மக்கள் தேவைகளை நிறைவு செய்ய வேண்டும்: எம்எல்ஏ சந்திரபிரியங்கா

  By DIN  |   Published on : 24th October 2017 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அரசு மற்றும் ஆளுநரிடையே நிலவும் போட்டி மனப்பான்மையை கைவிட்டு, அவர்கள் மக்கள் தேவைகளை நிறைவு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என என்.ஆர்.காங்கிரஸ்
  எம்எல்ஏ சந்திரபிரியங்கா வலியுறுத்தினார்.
  காரைக்கால் மாவட்டம், நெடுங்காடு தொகுதி என்.ஆர். காங்கிரஸ் கட்சி சட்டப்பேரவை உறுப்பினர் சந்திரபிரியங்கா கட்செவி அஞ்சலில் தனது விடியோ உரையை திங்கள்கிழமை பதிவேற்றம் செய்துள்ளார். அதில், அவர் கூறியுள்ளதாவது:
  காரைக்கால் மாவட்டத்தில் உள்ள 5 தொகுதிகளும் மோசமான நிலையில் உள்ளன. உங்களுக்குள் (அரசு - ஆளுநர்) போட்டி இருக்கலாம், அதனால் மக்கள் பாதிக்கக்கூடாது. கோப்புகளில் ஆளுநர் கையெழுத்திடவில்லை என்கிறார்கள் ஆட்சியாளர்கள். தம் வசம் கோப்புகள் இல்லை என்கிறார் ஆளுநர். எனவே, தற்போதைய நவீன வசதிகளைப் பயன்படுத்தி, இருதரப்பும் நேருக்குநேர் நேரலை மூலம் விவாதிக்கவேண்டும்.
  மக்களின் தேவைகளை நிறைவு செய்ய முடியாத நிலையில் எம்எல்ஏ பதவி எதற்கு என்ற சிந்தனை தோன்றுகிறது. போராட்டம் நடத்த மக்களை அழைத்தால் அவர்களின் ஒரு நாள் வருமானம் நிச்சயமாக பாதிக்கும். எனினும், தேவைப்பட்டால் சென்னை மெரீனாவில் கூடிய இளைஞர்கள் கூட்டம் போன்று காரைக்கால் கடற்கரையில் போராட்டம் நடத்தவேண்டிய நிலை வரும்.
  மக்களின் அத்தியாவசிய தேவைகள் நிறைவு செய்யப்படவேண்டும். இதை செய்ய முடியும் என்றால் மட்டுமே ஆளுநராக இருந்தாலும், அமைச்சர்களாக இருந்தாலும் காரைக்கால் வரலாம். பிரச்னைகளை பார்த்துச் செல்லும் நோக்கம் இருந்தால் காரைக்காலுக்கு வரவேண்டாம் என அதில் கூறியுள்ளார்.
  இதுகுறித்து அவரை தொடர்புகொண்டு கேட்டபோது, தற்போதைய அரசியல் சூழல், மக்களின் நிலை, ஆளுநர் மற்றும் ஆட்சியாளர்கள் மேற்கொள்ளவேண்டியவற்றை விளக்கியுள்ளேன். எனது கருத்து உரியவர்களுக்கு போய்சேர வாய்ப்புள்ளது என்றார்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai