சுடச்சுட

  

  மத்திய நிதிக் குழுவில் புதுவை சேர்க்கப்பட்டாலும் போதிய நிதி கிடைக்காது: முன்னாள் எம்.பி. ராமதாஸ்

  By DIN  |   Published on : 24th October 2017 01:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மத்திய நிதிக் குழுவில் புதுவை மாநிலம் சேர்க்கப்பட்டாலும் போதிய நிதி கிடைக்கப் போவதில்லை என முன்னாள் எம்.பி. ராமதாஸ் தெரிவித்தார்.
  இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: புதுச்சேரி மத்திய நிதிக்குழுவின் வரையறைக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. நிதிக் குழுவில் புதுச்சேரி சேர்ந்ததன் மூலம், யூனியன் பிரதேசத்தின் அந்தஸ்து மாநில அந்தஸ்தாக உயர்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
  இருப்பினும், இந்திய அரசு இது சம்பந்தமாக எந்த ஆணையையும் இன்னும் பிறப்பிக்கவில்லை.
  புதுச்சேரியை 15-வது நிதிக் குழுவில் சேர்க்க இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால், இன்றுவரை அந்தக் குழுவே நியமிக்கப்படவில்லை.
  இக்குழு அமைக்கப்பட்டு அதன் பணிகள் முடிந்து, அதன் பரிந்துரைகள் 2020-21ஆம் ஆண்டுகளுக்குள்ள ஐந்தாண்டுகளுக்குப் பொருந்துவனவாக இருக்கும். 2017-2020-ஆம் ஆண்டு வரை 14-வது நிதிக் குழுவின் பரிந்துரைகள்தான் அமலில் இருக்கும்.
  அக்குழுவில் புதுச்சேரி இடம்பெற வாய்ப்பில்லை. எனவே, இந்த ஆண்டோ அல்லது அடுத்த ஆண்டுகளுக்கோ புதுச்சேரிக்கான எந்த பரிந்துரையையும் மத்திய அரசு அமல்படுத்தப் போவதில்லை.
  15-வது நிதிக்குழு அமைந்த பிறகு, அக்குழு யூனியன் பிரதேசமான புதுச்சேரியைச் சேர்த்துக் கொள்வதற்கான அனுமதியைத் தர வேண்டும். இதெல்லாம் முடிந்து 2020-ஆம் ஆண்டில்தான் புதுச்சேரிக்கு எவ்வளவு நிதி கிடைக்கும் என்பதை நிதிக்குழு முடிவு செய்யும்.
  அதற்குள்ளேயே புதுச்சேரியின் பட்ஜெட்டில் 42 சதவீத நிதி புதுச்சேரிக்கு கிடைக்கும் என்று கூறுவது தவறானதும், மக்களிடையே தேவையில்லாத எதிர்பார்ப்பையும், எண்ணத்தையும் உருவாக்கும் கருத்தும் ஆகும்.
  மத்திய அரசு தனது வரி வருவாயிலிருந்து மாநிலங்களுக்கு எவ்வளவு பரிந்தளிப்பது என்பதை முடிவு செய்ய வேண்டும். அது எவ்வளவு என்பதை நிதிக்குழுதான் முடிவு செய்யும்.
  14-வது நிதிக்குழு மத்திய வரி வருவாயிலிருந்து 42 சதவீதத்தை 29 மாநிலங்களுக்கும் பிரித்தளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
  இதன் பொருள் ஒவ்வொரு மாநிலத்திற்கும் 42 சதவீதம் வருவாயாக கொடுப்பது என்பது அல்ல. மத்திய மொத்த வருவாயிலிருந்து 42 சதத் தொகை எல்லா மாநிலங்களுக்கும் என்று ஒதுக்கப்படும். அதற்குப் பிறகு 29 மாநிலங்கள் ஒவ்வொன்றுக்கும் எவ்வளவு தொகையை ஒதுக்கித் தருவது என்பதையும் நிதிக் குழுதான் பரிந்துரைக்கும்.
  மாநிலத்திற்கு என்று ஒதுக்கப்பட்ட மத்திய வரி வருவாயில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் எத்தனை சதவீதம் கொடுக்க வேண்டும் என்பதை நிதிக் குழு பரிந்துரைக்கும். புதுச்சேரியைப் பொருத்தவரை இந்தப் பங்கு 0.3 சதவிகிதத்திலிருந்து 0.5 சதவீதமாக இருக்கும் என்று நம்பலாம். உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படவில்லையென்றால், அதற்காக ஒதுக்கப்படும் நிதியுதவியும் சிடைக்காமல் போகும் எனத் தெரிவித்துள்ளார் ராமதாஸ்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai