சுடச்சுட

  

  மெர்சல் திரைப்பட விவகாரத்தில் காங்கிரஸ், பாஜக சுயவிளம்பரம் தேட முயற்சி: அதிமுக குற்றச்சாட்டு

  By DIN  |   Published on : 24th October 2017 12:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Mersal-Movie-1

  மெர்சல் திரைப்பட விவகாரத்தில் தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் சுயவிளம்பரம் தேடி வருகின்றன என சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் குற்றஞ்சாட்டினார்.

  புதுச்சேரியில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

  நாட்டில் மக்கள் நலன் சார்ந்த பல்வேறு பிரச்னைகள் இருக்கின்ற நிலையில், திரைப்படத்தை பற்றி தேசிய கட்சிகளான காங்கிரஸும், பாஜகவும் தங்களது சுய விளம்பரத்திற்காகவும், அரசியல் ஆதாயத்திற்காகவும் தேவையற்ற கருத்துகளை தெரிவித்துள்ளன.

  அவற்றை மக்கள் மீது திணித்து வருவதை புதுச்சேரி மாநில அதிமுக வன்மையாக கண்டிக்கிறது.

  மெர்சல் திரைப்படத்தில் மருத்துவம் தொடர்பாக தெரிவித்த ஜிஎஸ்டி சம்பந்தமான ஒரு தவறான கருத்து கூறப்பட்டுள்ளது. இது கூட தெரியாமல் கட்சியினர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

  கதிர்காமம் மருத்துவமனையில் டயாலிசஸ் மருத்துவப் பிரிவில் நடந்த 4 பேர் மரணம் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இதை முதல்வர் நாராயணசாமி ஏற்றுக்கொள்வாரா? புதுச்சேரியில் பொது மருத்துவமனையில் தரமான சிகிச்சை அளிப்பதை நாராயணசாமி உறுதிப்படுத்துவாரா? தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ பரிசோதனை என்ற பெயரில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதை தடுத்து நிறுத்த முடியுமா?.

  நடைமுறையில் உள்ள பேனர் சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று நாராயணசாமி கூறி வருகிறார். இது மக்களை ஏமாற்றும் வேலை.

  தொற்று நோயால் மக்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு ஊழியர்களுக்கு போனஸ் போடவில்லை. இலவச அரிசி, புடவைகள், கைலிகள் வழங்கவில்லை. பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் 10 ஆயிரம் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை.

  இதுகுறித்து கவலைப்படாமல் மெர்சல் திரைப்படத்தை பற்றி பேசலாமா?

  பொதுப்பணித் துறையில் 112 கோடி ரூபாய், இலவச அரிசி கொள்முதல் செய்ததில் 20 கோடி ரூபாய் நிலுவை உள்ளது. இலவச சர்க்கரை கொள்முதல் செய்ததில் ஒன்னே முக்கால் கோடி ரூபாய் பாக்கி உள்ளது. அரசின் கடனை முதலில் கொடுங்கள் பிறகு இலவச பொருள்கள் வழங்கலாம் என ஆளுநர் கூறியுள்ளார். பாப்ஸ்கோவில் மட்டும் 32 கோடி ரூபாய் கடன் உள்ளது.

  இதுகுறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும். சிபிஐ ஆயுதத்தை கையில் வைத்துக்கொண்டு அமைச்சர் மற்றும் அதிகாரிகளை கிரண் பேடி மிரட்டி வருகிறார். ஆனால், அதிமுக சார்பில் புகார் கூறியும் இதுவரை ஏன் ஆளுநர் பாப்ஸ்கோ முறைகேட்டில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவில்லை.

  அரசின் வருவாயை பெருக்க அனைத்து எம்எல்ஏக்களையும் அழைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்த வேண்டும் என்றார் அன்பழகன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai