சுடச்சுட

  

  புதுவையில் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு இலவச பிஸ்கெட் வழங்கும் திட்டம் தொடக்கம்

  By    புதுச்சேரி,  |   Published on : 25th October 2017 08:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் 19,377 அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியாக இலவச பிஸ்கெட் வழங்கும் திட்டத்தை முதல்வர் நாராயணசாமி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைத்தார்.
   புதுச்சேரியில் கடந்த 2002-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது அப்போதைய முதல்வர் ரங்கசாமியின் முயற்சியால் இந்தியாவிலேயே முதல் முறையாக பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியாக இலவசமாக பால், பிஸ்கெட் வழங்கும் திட்டம் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் பெயரால் தொடங்கப்பட்டது.
   இந்தத் திட்டத்தை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அப்போது தொடக்கிவைத்தார். இதனிடையே, புதுச்சேரி அரசின் கடும் நிதிப் பற்றாக்குறை காரணமாக கடந்த 2013-ஆம் ஆண்டு இந்தத் திட்டம் நிறுத்தப்பட்டது.
   பிறகு, சில மாதங்கள் கழித்து பால் மட்டும் வழங்க முடிவு செய்யப்பட்டு, தற்போது மழலையர் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை காலை நேரத்தில் சூடான பால் வழங்கப்பட்டு வருகிறது.
   இந்த நிலையில், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியாக பிஸ்கெட் வழங்கும் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த முதல்வர் நாராயணசாமி அரசு தீவிரமாக முயற்சி செய்து வந்தது.
   அதனடிப்படையில், தற்போது முதல் கட்டமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு காலைச் சிற்றுண்டியாக பிஸ்கெட் வழங்கும் திட்டத்தை அரசு தொடங்கி உள்ளது.
   புதுச்சேரி ஐயங்குட்டிபாளையம் அரசு தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதல்வர் நாராயணசாமி பிஸ்கெட் வழங்கும் திட்டத்தை தொடக்கிவைத்தார்.
   பெங்களூரைச் சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் மூலம் புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள 210 தொடக்கப் பள்ளிகளைச் சேர்ந்த 19,377 (புதுவையில் 14,462, காரைக்காலில் 4,915) மாணவ, மாணவிகளுக்கு வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களுக்கு முதல் கட்டமாக இலவச பிஸ்கெட் வழங்கப்பட உள்ளது.
   பின்னர், அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பிஸ்கெட் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும்.
   நிகழ்ச்சியில் கல்வி அமைச்சர் கமலக்கண்ணன், தொகுதி எம்.எல்.ஏ. தீப்பாய்ந்தான், அரசு கல்வித் துறை இயக்குநர் ல.குமார் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai