சுற்றுலா செல்லும் ஆர்வத்தை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்: அமைச்சர் கமலக்கண்ணன்
By புதுச்சேரி, | Published on : 26th October 2017 08:58 AM | அ+அ அ- | எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!
சுற்றுலாத் தலங்களுக்கு செல்லும் ஆர்வத்தை மாணவ, மாணவிகள் வளர்த்துக் கொள்ள வேண்டும் என கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் வலியுறுத்தினார்.
பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரி மனையியல் துறை சார்பில், "வளங்குன்றா
சுற்றுலா-வளர்ச்சிக்கு ஓர் கருவி' என்ற தலைப்பில் தேசிய கருத்தரங்கம், ஊட்டச்சத்து உணவுப் பொருள்கள் குறித்த கண்காட்சி உள்ளிட்டவை புதன்கிழமை நடைபெற்றது.
முதல்வர் ஆர்.பூங்காவனம் வரவேற்றார். கருத்தரங்க ஒருங்கிணைப்பாளர் டாக்டர் கயல்விழி பாலமுருகன் நோக்கவுரைஆற்றினார். முத்தியால்பேட்டை எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டன் சிறப்புரை ஆற்றினார். கருத்தரங்கை தொடக்கி வைத்து கல்வி அமைச்சர் ஆர்.கமலக்கண்ணன் பேசியதாவது: புதுச்சேரி மாநிலம் கனிம வளம் இல்லாத மாநிலமாக உள்ளது. நீளமான கடற்கரையை கொண்டதாக உள்ளது. நுகர்வு மாநிலமாக உள்ளதால் சுற்றுலா தொழில் மூலம் கிடைக்கும் வருவாயை பெரிதும் நம்பி உள்ளது. சுற்றுலாவின் ஒரு பகுதியாக விருந்தோம்பலும் உள்ளது. இந்தக் கல்லூரியில் உள்ள மனையியல் துறைக்கும் விரும்தோம்பலுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. மாணவிகள் சுற்றுலா செல்லும் பழக்கத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.
இந்தியாவில் மருத்துவ சுற்றுலா வளர்ந்து வருகிறது. தற்போது 5 லட்சம் பேர் மருத்துவ சுற்றுலா மூலம் வந்துள்ளனர். இதன் மூலம் ரூ.300 கோடி வருவாய் கிட்டியுள்ளது. விரைவில் இது ரூ.900 கோடியாக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலா மூலம் போதிய வேலைவாய்ப்புகள், வருவாய் கிட்டும். புதுச்சேரியிலும் சுற்றுலா வளர்ச்சித் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. நமது பாரம்பரிய உணவு முறை மூலமும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளையும் கவரலாம். மனையியல் துறை மாணவிகள் இதற்கான வழிமுறைகளை அறிய வேண்டும். புதுவையின் இதர பிராந்தியங்களான ஏனாம், மாஹே போன்றவை சுற்றுலா தலங்களாக உள்ளன. அவற்றுக்கு கல்லூரி மாணவ, மாணவிகள் சென்று பார்வையிட வேண்டும் என்றார் கமலக்கண்ணன்.
பிம்ஸ் பதிவாளர் மருத்துவர் அனில் பர்தி, அசோக் ரிசார்ட்ஸ் ராஜீவ் நாயர், சுற்றுலாத் துறை உதவிப் பேராசிரியர் தேவபாலன், பேராசிரியர் சிவா, பேராசிரியை மலர்விழி, பேராசிரியர் மனோஜ் பிள்ளை ஆகியோர் சிறப்புரையாற்றினர். துறைத் தலைவர் முனைவர் ஜோஸ்பின் நிர்மலா மணி நன்றி கூறினார். உதவிப் பேராசிரியை ரஜினி சனோலியன் தொகுப்புரை ஆற்றினார்.
பல்வேறு கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். பாரம்பரிய சத்து உணவுப் பொருள் கண்காட்சியையும் ஏராளமானோர் பார்வையிட்டனர்.