சுடச்சுட

    

    புதுவையில் 300 தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணம் நிர்ணயம்

    By  புதுச்சேரி,  |   Published on : 26th October 2017 08:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    புதுவை மாநிலத்தில் 300 தனியார் பள்ளிகளுக்கு கல்விக் கட்டணத்தை நிர்ணயித்து நீதிபதி அக்பர் அலி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு அறிவித்துள்ளது.
     புதுவை மாநிலத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணம் அதிகளவில் வசூலிக்கப்படுவதாகப் புகார்கள் எழுந்தன.
     இதனால் ஏழை, எளிய மாணவ-மாணவிகள், பெற்றோர் கடுமையாகப் பாதிக்கப்படுவதாகவும், எனவே கல்விக் கட்டணத்தை குறைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டது.
     இதையடுத்து, கடந்த 2015-ஆம் அண்டு ஓய்வு பெற்ற நீதிபதி அக்பர்அலி தலைமையில் கல்விக் கட்டண நிர்ணயக் குழு அமைக்கப்பட்டது.
     கட்டணத்தை நிர்ணயிப்பதற்காக பள்ளிகளிடம் கட்டமைப்பு வசதி, ஆசிரியர்கள் எண்ணிக்கை, மாணவர்களுக்கான வசதிகள் தொடர்பாக முழு விவரங்களைத் தர வேண்டும் என இந்தக் குழு கேட்டுக் கொண்டது.
     ஆனால், சில பள்ளிகள் மட்டுமே விவரங்களை அளித்தன. இதனால், பள்ளிக் கட்டணத்தை நிர்ணயம் செய்வது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்து வந்தது.
     இதுதொடர்பாக முதல்வர் நாராயணசாமி தலைமையில் தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிப்பது தொடர்பாக ஆய்வுக் கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது. அப்போது, தனியார் பள்ளி நிர்வாகிகளையும் அழைத்து உரிய விவரங்களை தர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
     198 பள்ளிகள் மட்டுமே அப்போது விவரங்களைத் தந்ததாக தெரிவிக்கப்பட்டது. பிறகு, அனைத்துப் பள்ளிகளும் கட்டண நிர்ணயக் குழுவிடம் விவரங்களை சமர்ப்பிக்காவிட்டால் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டது. இந்த நிலையில், இதன் தொடர்ச்சியாக நீதிபதி அக்பர் அலி தலைமையிலான கட்டண நிர்ணயக் குழு கடந்த 4 மாதங்களாக பள்ளிகளுக்கான கட்டணத்தை நிர்ணயிக்கும் பணியில் ஈடுபட்டது.
     இதன்படி, 2017-18, 2018-19, 2019-2020 ஆகிய மூன்று ஆண்டுகளுக்கு வசூலிக்கப்பட வேண்டிய கட்டணங்களை வகுப்பு வாரியாக நிர்ணயித்துள்ளது.
     புதுச்சேரியில் 217, காரைக்காலில் 57, மாஹேயில் 15, ஏனாமில் 11 பள்ளிகள் என மொத்தம் 300 பள்ளிகளுக்கு 3 கல்வி ஆண்டுகளுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. குறைந்தபட்சக் கட்டணமாக ஏனாமில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.562-ம், 6 -ஆம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை ரூ.660 வரையிலும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     அதிகப்பட்சமாக புதுச்சேரியில் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை ரூ.36,700-ம், 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை ரூ.40,050-ம், 9, 10 வகுப்புகளுக்கு ரூ.44,000-ம், 11, 12 வகுப்புகளுக்கு ரூ.47,000-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
     கட்டண நிர்ணய ஆணையில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள்: இந்தக் கட்டணம் 3 ஆண்டுகளுக்கு அமலில் இருக்கும். கட்டணக் குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைக் காட்டிலும் கூடுதலாக வசூலிக்கக் கூடாது. பெற்றோர் சுமையைக் குறைக்கும் வகையில் தவணை வாரியாகவும் கட்டணத்தை வசூலிக்கலாம்.
     மாணவர்களுக்குத் தரப்படும் பாடப் புத்தகங்கள், சீருடை, கல்வி உபகரணங்கள் இந்தக் கட்டணத்தில் சேராது. அவற்றின் அசல் விலையை மட்டுமே பெற்றோரிடம் வசூலிக்க வேண்டும். பள்ளிகள் சார்பில் மாணவர்களுக்கு அளிக்கப்படும் போக்குவரத்து வசதியும் இந்தக் கட்டணத்தில் சேராது. போக்குவரத்துக் கட்டணம் சரியான முறையில் வசூலிக்கப்பட வேண்டும். ஆய்வகக் கட்டணம் இதில் அடங்காது. 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேவைப்பட்டால் கட்டணம் வசூலிக்கலாம்.
     விளையாட்டு, யோகா போன்ற இதரச் செயல்பாடுகளுக்கான கட்டணமும் இதில் சேராது.
     இந்தக் கட்டண நிர்ணய ஆணையை பள்ளிகளின் அறிவிப்பு பலகையிலும், பெற்றோர் பார்வையில் படும்படியும் ஒட்ட வேண்டும். ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிடக் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டிருந்தால், கூடுதல் தொகையைத் திரும்பத் தர வேண்டும் அல்லது வரும் ஆண்டுகளுக்கான தவணைகளில் சரி செய்து கொள்ள வேண்டும்.
     இந்த உத்தரவை அரசு கல்வித் துறை இயக்குநர் ல.குமார் வெளியிட்டார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai