சுடச்சுட

  

  கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் புதுச்சேரியில் பல்வேறு முருகன் கோயில்களில் புதன்கிழமை இரவு நடைபெற்றது.
   தமிழ்க் கடவுள் முருகப் பெருமானுக்கு நடைபெறும் விழாக்களில் எல்லாம் முதன்மையானது கந்தசஷ்டி விழாவாகும்.
   சஷ்டி விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவோருக்கு கேட்ட வரம் எல்லாம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகும். தேவர்களை துன்புறுத்திய சூரபத்மனை சம்ஹாரம் செய்வதற்காக சிவபெருமான் தனது நெற்றிக் கண்ணில் இருந்து 6 தீப்பொறிகளை உண்டாக்க, அவை சரவணப் பொய்கையில் விழுந்து, குழந்தைகளாக மாறின. அந்தக் குழந்தைகளை பார்வதி தேவி, சேர்த்து அணைக்க, 6 முகமும், பன்னிரு கைகளுமாக ஒரே உருவம் பெற்று, கந்தன் என அக்குழந்தை பெயர் பெற்றது. சக்தி வேலுடன் கந்தன், சூரபத்மனை சம்ஹாரம் செய்து, தேவர்களை காப்பாற்றியதாக புராணம். இதன் அடிப்படையில், ஐப்பசி மாதம் அமாவாசைக்கு மறுநாளான வளர்பிறை பிரதமை முதல் சஷ்டி வரை 6 நாள் கந்தசஷ்டி கடைபிடிக்கப்படுகிறது.
   6-ஆம் நாளான சஷ்டி அன்று முருகன் கோயில்களில் சூரசம்ஹாரம் நடத்தப்படுவது வழக்கம். புதுவை கதிர்காமத்தில் உள்ள கதிர்வேல் சுவாமி கோயில், லாஸ்பேட்டை பெத்துசெட்டிப்பேட்டை சிவசுப்பிரமணிய சுவாமி கோயில், சாரம் முருகன் கோயில்களில் கந்தசஷ்டி விழா கடந்த 4 நாள்களாக நடைபெற்றது. இதன் முக்கிய நிகழ்ச்சியான அம்மனிடம் சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் புதன்கிழமை இரவு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் முருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai