சுடச்சுட

  

  புதுச்சேரி அருகே மேட்டுப்பாளையத்தில் நடைபெற்ற 3 ரெளடிகள் கொலை வழக்கு தொடர்பாக 5 பேரை போலீஸார் கைது செய்தனர்.
   தமிழகத்துக்கு கடத்தப்படும் சாராய விற்பனை தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இந்தக் கொலைகள் நிகழ்ந்ததாகத் தெரிய வந்துள்ளது.
   புதுச்சேரி முத்தரையர்பாளையம் ஜீவா வீதியைச் சேர்ந்த ஞானசேகர்(எ) சேகர் (24), சண்முகாபுரத்தைச் சேர்ந்த ஜெரால்டு (24). முத்தரையர்பாளையம் காந்தி திருநல்லூரைச் சேர்ந்த சதீஷ் (23). ரௌடிகளான மூவரும், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த ரங்கராஜன் (25), ரகு, மாது ஆகியோருடன் தீபாவளியன்று இரவு (அக்.18)மேட்டுப்பாளையம் ராம்நகரில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள இரும்பு பீரோ, கட்டில் செய்யும் சிறு தொழில்கூடத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர்.
   அப்போது அங்கு வந்த 12 பேர் கும்பல் அந்தத் தொழில்கூடத்தைச் சுற்றி வளைத்து நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. தொடர்ந்து அரிவாளால் அவர்களை சரமாரியாக வெட்டியது. இதில் ஜெரால்டு, சேகர், சதீஷ் மூவரும் சம்பவ இடத்திலயே உயிரிழந்தனர். ரங்கராஜன் பலத்த காயமடைந்தார். ரகு லேசான காயமடைந்தார். மாது காயமின்றித் தப்பினார்.
   இந்தக் கொலைகள் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தக் கொலை தொடர்பாக எஸ்.பி. ரச்சனா சிங் தலைமையில் ஆய்வாளர்கள் தங்கமணி, கண்ணன், நாகராஜ், அதிரடிப்படை ஆய்வாளர் கார்த்திகேயன், உதவி ஆய்வாளர்கள் இனியன், வீரபுத்திரன், ரமேஷ் ஆகியோர் அடங்கிய தனிப் படைகள் அமைக்கப்பட்டன.
   தனிப் படையினர் புதுச்சேரி, தமிழகப் பகுதிகளில் தீவிர விசாரணை மேற்கொண்டதில், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரெளடி தமிழரசன் தரப்பினர் இந்தக் கொலைகளைச் செய்தது தெரிய வந்தது.
   புதுச்சேரி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை மேற்கொண்டதில், கொலையில் தொடர்புடைய சண்முகபுரத்தைச் சேர்ந்த நந்தகுமார் (18) செவ்வாய்க்கிழமை இரவு கைது செய்யப்பட்டார்.
   அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பெறப்பட்ட தகவலின் பேரில், சாணரப்பேட்டையைச் சேர்ந்த சூர்யா என்ற சங்கர் (18) கைது செய்யப்பட்டார். இதன் தொடர்ச்சியாக, புதன்கிழமை லாஸ்பேட்டை ஜீவா காலனி சுதாகர் என்ற அப்துல்லா (26), லாஸ்பேட்டை புதுப்பேட்டை கலையலரசன் (29), சின்னதுரை (25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
   அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டதில் தொழில் போட்டி, முன்விரோதம் காரணமாக மூவரைக் கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து, 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.
   இதுதொடர்பாக முதுநிலை எஸ்.பி. ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுச்சேரியில் இருந்து தமிழகத்துக்கு கடத்தப்படும் சாராயம், மதுபானங்கள் விற்பனை விழுப்புரத்தைச் சேர்ந்த ரெளடி தமிழரசன் கட்டுப்பாட்டில் இருந்து வருகிறது. அதில் நல்ல வருமானம் கிடைத்து வந்த நிலையில், அதற்குப் போட்டியாக புதுச்சேரி சேகர் தரப்பும் இறங்கியதால் முன்விரோதம் ஏற்பட்டது. இதனால், இரு தரப்புக்கும் இடையே அவ்வப்போது மோதல், தகராறு ஏற்பட்டது. இதற்கிடையே சாராய, மதுபான விற்பனையை முழுமையாக தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரத் திட்டமிட்ட சேகர் தரப்பு, தமிழரசனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தது.
   சேகரிடமும் பழகி வந்த நந்தகுமார் இதுகுறித்து தமிழரசன் தரப்புக்கு தெரிவித்தார். இதனால், ஆத்திரமடைந்த தமிழரசன் அவரது தரப்பினரை அனுப்பி தீபாவளியன்று இரவில் சேகர், அவரது கூட்டாளி சதீஷை தாக்குதல் நடத்தினார். இதில் அவர்கள் கொல்லப்பட்டனர். அப்போது, அவர்களைக் காப்பாற்ற வந்த ஜெரால்டும் கொலை செய்யப்பட்டார்.
   கொலையாளிகளிடம் இருந்து 2 கத்திகள், மோட்டார் சைக்கிள், குத்து கத்தி, செல்லிடப்பேசிகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.
   இதற்கிடையில், ரெளடி தமிழரசன், அவரது கூட்டாளிகள் வேலுமணி, அந்தோணி ஆகியோர் சேலத்தில் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
   அவர்களை புதுச்சேரிக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
   மேட்டுப்பாளையத்தில் தொழிலதிபர்களை மிரட்டி எவரும் மாமூல் வசூலிக்கவில்லை. ரெளடிகள் மாமூல் கேட்டு வசூலிப்பதை தடுக்க செயல் திட்டம் தயாரித்து வருகிறோம். குறிப்பாக, ஆலை அதிபர்கள், சங்கங்கள், ஒப்பந்தத் தொழிலாளர்களை அமர்த்தும் நிறுவனங்கள், சரக்கு ஏற்றி, இறக்குவோரை அழைத்து உரிய ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வழிமுறைகள் ஏற்படுத்தப்படும்.
   ரெளடி, மாமூல் கேட்போர் குறித்து அச்சமின்றி தகவல் தெரிவிக்கலாம். இதுவரை 30 பேர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பாய்ந்துள்ளது என்றார் ராஜீவ் ரஞ்சன்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai