சுடச்சுட

  

  கந்துவட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை: அதிமுக வலியுறுத்தல்

  By  புதுச்சேரி,  |   Published on : 27th October 2017 08:11 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் கந்து வட்டி வசூலிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டப்பேரவை அதிமுக கட்சித் தலைவர் ஆ.அன்பழகன் வலியுறுத்தினார்.
   இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
   புதுவையில் சிறு கடைகள் வைத்திருக்கும் ஏழை, எளிய, நடுத்தர மக்கள் 75 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கந்துவட்டியினரிடம் சிக்கி சீரழிந்து வருகின்றனர்.
   இது அன்றாட நிகழ்வாக உள்ளது. இதை அதிமுக பலமுறை சட்டப்பேரவையிலும், முதல்வர் பங்கேற்கும் அரசு விழாக்களிலும் சுட்டிக்காட்டி வந்துள்ளது.
   மேலும், புதுச்சேரி மக்களை கந்துவட்டி கொடுமையில் இருந்து காப்பாற்ற வங்கிகள் வியாபாரிகளுக்கு சிறு கடன்களை வழங்க வேண்டும் அதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் வற்புறுத்தி வந்தது. ஆனால், கந்து வட்டிக்கு கடன் பெற்று பாதிக்கப்படுபவர்கள் மீது வங்கியும், அரசும் பாராமுகமாக உள்ளது.
   புதுவையில் மீட்டர் வட்டி, தின வட்டி, நேர வட்டி, வார வட்டி, மாத வட்டி என பல வகைகளில் வட்டி வசூலிக்கப்படுகிறது. கந்து வட்டி கொடுப்பவர்கள் வெற்றுக் காசோலை வாங்கி வைத்துக் கொண்டு, காசோலையில் அதிக தொகையை நிரப்பி கேட்டு நெருக்கடி தருகின்றனர். இதனால், கடன் பெற்றவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். கந்து வட்டிக் கும்பல் மாபியா கும்பல் போல் அடியாள்களை வைத்து செயல்படுகின்றனர்.
   போலீஸார் கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தால் வழக்குப் பதிவு செய்வதில்லை. கந்து வட்டிக்கு பணம் பெற்ற குடும்பத்தினரின் பெண்களை தூக்கிச் சென்று 2 நாள்கள் அடைத்து வைக்கின்றனர். அப்போது சொத்துகள் ஏதேனும் அவர்கள் பெயரில் இருந்தாலும் எழுதி வாங்கிக் கொள்கின்றனர்.
   தமிழகத்தைப் போல விரும்பத்தகாத சம்பவம் புதுச்சேரியில் நடைபெறுவதற்கு முன்பு முதல்வர் கந்து வட்டிக்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனவே, கந்து வட்டியை தடுக்கும் நோக்கில் வங்கியும், அரசும் இணைந்து கடன் தர முன்வர வேண்டும். மேலும், கந்து வட்டிக் காரர்களுக்கு முதல்வர் உடனடியாக ஒரு எச்சரிக்கை வெளியிட வேண்டும். எச்சரிக்கைக்குப் பிறகு திருத்திக் கொள்ளாதவர்களை இரும்புக் கரம் கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   வங்கிகள் ரூ.ஒரு கோடிக்கு மேல் கடன் கேட்பவர்களின் வீடுகளுக்குச் சென்று ஆவணங்களை கேட்டுப் பெற்று, சரி பார்த்து கடன் தருகின்றனர். ஆனால், ரூ.10 ஆயிரம் கடன் கேட்டு வரும் ஏழை, எளியவர்களை பல ஆவணங்கள் கேட்டு கடன் தராமல் அலைய விடுகின்றனர். இதனால் வங்கிகளால் ஏழைகள் பயன் பெறும் நிலை இல்லை. உண்மையானவர்களுக்கு கடன் கொடுக்க வங்கிகளுக்கு சரியான விதிமுறைகளை வகுக்க வேண்டும் என்றார் அன்பழகன்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai