Enable Javscript for better performance
பேரவைத் தலைவருடன் முதல்வர் சந்திப்பு- Dinamani

சுடச்சுட

    

    அமெரிக்காவில் இருந்து இரு மாதங்கள் கழித்து புதுச்சேரி திரும்பிய சட்டப்பேரவைத் தலைவர் வைத்திலிங்கத்தை வியாழக்கிழமை முதல்வர் நாராயணசாமி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
     பாஜகவைச் சேர்ந்த சாமிநாதன், செல்வகணபதி, சங்கர் ஆகியோரை பேரவையின் நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்து துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்குப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் மறுத்துவிட்டார்.
     இந்த நிலையில், ஆளுநர் மாளிகையில் மூன்று நியமன எம்.எல்.ஏ.க்களுக்கும் எவ்வித அறிவிப்பும் இன்றி ஆளுநர் கிரண் பேடி பதவிப் பிராமணம் செய்து வைத்தார்.
     இது, புதுவை அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மாநில காங்கிரஸ் அரசு இதற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்தது. மேலும், அந்தக் கட்சியின் எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.
     இதற்கிடையே, இரு மாத விடுமுறையில் பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் அமெரிக்கா சென்றிருந்த நிலையில், நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் கிடப்பில் இருந்தது. இந்த நிலையில், வைத்திலிங்கம் புதன்கிழமை இரவு புதுச்சேரிக்குத் திரும்பினார். அவரை, அவரது வீட்டில் முதல்வர் நாராயணசாமி வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார்.
     புதுவையில் நிலவும் அரசியல் சூழ்நிலை, நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம், ஆளுநர் கிரண் பேடியின் தலையீடு தொடர்பாக இருவரும் ஆலோசனை மேற்கொண்டதாகத் தெரிகிறது.
     நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் உரிய அறிவிப்பை தலைமைச் செயலருக்கு ஏற்கெனவே அனுப்பியுள்ளது. இந்நிலையில், பேரவைத் தலைவர் வைத்திலிங்கம் இதில் என்ன முடிவெடுப்பார் என அரசியல் வட்டாரங்கள் எதிர்நோக்கியுள்ளன.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai