சுடச்சுட

  

  அரும்பார்த்தபுரம் மேம்பாலப் பணிக்கு நிலம் கையகம்: சமூக தாக்கம் குறித்து மதிப்பீடு நடத்த முடிவு

  By  புதுச்சேரி  |   Published on : 28th October 2017 08:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வில்லியனூர் அருகே அரும்பார்த்தபுரத்தில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப் பணிக்கு நிலம் கையகப்படுத்துவதால் ஏற்படும் சமூக தாக்கம் குறித்து முறையாக மதிப்பீடு மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
   "புதுச்சேரியில் தொடர்ந்து போக்குவரத்து நெரிசல் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இந்த நிலையில் சென்னை-கடலூரை இணைக்கும் 100 அடி சாலை, புதுவை -
   விழுப்புரத்தை இணைக்கும் அரும்பார்த்தபுரம் பகுதியில் ரயில்வே லெவல் கிராசிங்குகள் உள்ளன. இவற்றின் வழியாக நாள்தோறும் ஏராளமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவ்வப்போது ரயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் இருபுறமும் நீண்ட வரிசையில் காத்திருந்து செல்லும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் இரு இடங்களில் மேம்பாலம் கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி, 100 அடி சாலையில் மேம்பாலத்தின் ஒரு பகுதி பணி முடிக்கப்பட்டு போக்குவரத்துக்கு திறக்கப்பட்டுள்ளது. மறுபுறத்துக்கான பணிகளும் தீவிரமாக நடந்து வருகின்றன.
   கடந்த 2016ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி, மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், இணைப்பு பாலத்துக்கு அடிக்கல் நாட்டியதையடுத்து பணிகள் தொடங்கியது. பணிகளை 9 மாதத்துக்குள் முடித்து பயன்பாட்டுக்கு விட திட்டமிடப்பட்டது. ஆனால், பணிகள் நிறைவடையவில்லை.
   ரூ.34 கோடி செலவில் மேற்கொளளப்பட்டு வரும் அரும்பார்த்தபுரம் மேம்பாலப் பணிகள் இதுவரை 75 சதவீதம் மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாலத்தின் பணிகள் முழுமையாக முடிவடைய நிலம் கையகப்படுத்தப்பட வேண்டியுள்ளது.
   நிலத்தை எடுக்க சில உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்றம் சென்றுள்ளனர். நிலத்துக்கான இழப்பீடு தொகை குறைவாக உள்ளது என சிலரும், நிலத்தை தரவும் மறுத்துள்ளனர்.
   கடந்த 2013-இல் மத்திய அரசு நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு, மீள்குடியேற்றச் சட்டத்தை கொண்டு வந்தது. இந்தச்சட்டம் 2013-இல் நியாயமான இழப்பீட்டு உரிமை மற்றும் வெளிப்படையான நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்றச் சட்டம் அல்லது நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின் கீழ் அரசுப் பணிகளுக்கான நிலத்தை கையகப்படுத்தலாம் என அறிவித்தது.
   மேம்பாலத்தின் தெற்கு பகுதியில் இணைப்புச் சாலைக்காக நிலம் தேவைப்படுகிறது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தின்படி, சமூக தாக்க மதிப்பீடு மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பணிகளை மாவட்ட நிர்வாகம் தொடங்கியுள்ளது. இதற்காக 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் மேட்டுப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் அன்புசெந்தில், பாரதிதாசன் மகளிர் கல்லூரி மனையியல் துறை பேராசிரியை ரஜினி, ஓய்வு பெற்ற புள்ளியியல் ஆய்வாளர் டி.ராமகிருஷ்ணன், உதவிக்கரங்கள் சமூக தொடர் கல்வி இயக்கம் ஆலிஸ் தாமஸ் ஆகியோர் இதில் இடம்பெற்றுள்ளனர்.
   இக்குழு பாலப்பணிகளுக்கு தேவைப்படும் நிலம், கையகப்படுத்தும் நிலம் மக்கள் பயன்பாட்டுக்கு உதவுமா, அப்பகுதி மக்களிடம் அதன் பாதிப்பு, மாற்றிடம் பெறுவோருக்கான மறுவாழ்வு குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கும். அரசின் நிபுணர் குழுவால் அறிக்கை பரிசீலிக்கப்பட்டு தாலுகா, பஞ்சாயத்து அலுவலகங்களில் மக்கள் பார்வைக்கு ஒட்டப்படும். அதன் பின் அரசு இறுதி முடிவெடுக்கும். மேலும் இக்குழு தொடர்புடைய நபர்களிடம் கலந்து ஆலோசித்து அனைத்து நில ஆவணங்களையும் விரிவாக ஆராய்ந்து விவரங்களை சேகரிக்கும்.
   இந்த சமூக தாக்க மதிப்பீடு என்பது எடுக்கப்படும் நிலம், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு இதர சமூக பாதிப்பு விவரங்களை கொண்டிருக்கும்.
   நிலத்தின் வகை, உரிமையாளர்கள், வில்லியனூர் தாலுகா குரும்பாப்பேட்டில் பாதிக்கப்படும் வீடுகள், பொது, தனியார் உள்கட்டமைப்பு வசதிகள், போன்றவையும் இழப்பீடு நிதியுடன் முடிவு செய்யப்படும். நிலங்களை கையகப்படுத்த அரசு பணிகளை தொடங்கினாலும், நீதிமன்றத்துக்கு சிலர் சென்றதால் இப்பணி நின்றுள்ளது. இதற்கிடையே உயர்நீதிமன்ற உத்தரவின்படியும், 2013-ம் ஆண்டு நிலம் கையகப்படுத்துதல், புனர்வாழ்வு, மீள்குடியேற்றச் சட்டத்தின்படி நிலம் கையகப்படுத்தப்படுகிறது என்று மாவட்ட நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai