சுடச்சுட

  

  நோயாளிகளின் ஆரோக்கியமான வாழ்வைத் தீர்மானிப்பதில் மருத்துவப் பதிவேடுகளுக்கு முக்கியப் பங்கு: ஜிப்மர் இயக்குநர்

  By  புதுச்சேரி,  |   Published on : 28th October 2017 08:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நோயாளிகளின் ஆரோக்கியமான வாழ்வைத் தீர்மானிப்பதில் மருத்துவப் பதிவேடுகள் முக்கியப் பங்கு வகிப்பதாக புதுவை ஜிப்மர் இயக்குநர் எஸ்சி.பரிஜா கூறினார்.
   நிகழாண்டு மருத்துவப் பதிவேட்டின் கல்வி, செயல்பாடுகளின் பொன்விழா ஆண்டு ஆகும். இதை முன்னிட்டு ஜிப்மர் மற்றும் இந்திய சுகாதார தகவல் மேலாண்மை சங்கம் சார்பில் ஆசிய அளவிலான கருத்தரங்கம், புதுச்சேரியில் வெள்ளிக்கிழமை தொடங்கியது. அதன் இயக்குநர் சுபாஷ் சந்திரபரிஜா மாநாட்டைத் தொடக்கி வைத்துப் பேசியதாவது:
   இந்த மாநாட்டின் முக்கிய கருப்பொருள் "ஒரு நோயாளி, ஒரு எண், ஒரு பதிவேடு-பிறப்பு முதல் இறப்பு வரை' என்ற தலைப்பில் பல்வேறு அம்சங்களில் விவாதிக்கப்படவுள்ளன. ஜிப்மரில் மருத்துவப் பதிவேடுகள் துறை தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகின்றன. முதலில் இந்தத் துறை மனிதர்கள் மூலமும், பின்னர் கணினியில் பதிவு செய்யப்பட்டும், தற்போது டிஜிட்டல் மயமாகியும் வருகிறது. நோயாளிகளின் மருத்துவ சிகிச்சை விவரங்கள், முடிவுகள் தொடர்பாக டிஜிட்டல் மயமாக்கும் பணி நிறைவடையும் நிலையில் உள்ளது. பல ஆண்டுகள் கழித்தும் நோயாளிகளின் மருத்துவத் தகவல்களை அறிய இந்த பதிவேடுகள் உதவுகின்றன. அவர்களின் ஆரோக்கியமான வாழ்வில் மருத்துவப் பதிவேடுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஜிப்மரில் ஏற்கெனவே நோயாளிகளின் மருத்துவப் பரிசோதனை முடிவுகள், விவரங்களை எங்கிருந்து வேண்டுமானாலும் இணையம் மூலம் பார்வையிடும் வசதி உள்ளது. இது மேலும் நவீனப்படுத்தப்படும் என்றார்.
   இந்திய தகவல் மேலாண்மைக் கழகத்தின் தலைவர் டாக்டர் ஜி.டி. மொக்லி முன்னிலை வகித்தார். மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அசோக் சங்கர் படே, கல்லூரி முதல்வர் டாக்டர் சுவாமிநாதன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். துணை மருத்துவக் கண்காணிப்பாளர் அனிதா ருஸ்தகி வரவேற்றார். மருத்துவ பதிவேட்டுத் துறை மருத்துவ அதிகாரி ஆனந்தராஜு நன்றி கூறினார். கணிணி மயமாக்குதலின் நன்மைகள், உலக அளவிலான மின்னணு மருத்துவப் பதிவேடு பற்றிய கண்டுபிடிப்புகள், செயல்பாட்டு உக்திகள், தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப மாற்றங்கள், நிபுணர்கள் எதிர்கொள்ளும் சவால்களும் அதற்கான தீர்வுகளும், சுகாதார மேலாண்மை நிபுணர்களின் 21-ஆம் நூற்றாண்டின் தேவைகள் மற்றும் நோயாளி பாதுகாப்புத் தரம், விரிவான மருத்துவத் தணிக்கை முறை, தரமான பராமரிப்பு ஆய்வு மற்றும் முறையான மருத்துவ ஆவணம் பாதுகாத்தல் ஆகியன குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த மாநாடு சனிக்கிழமையுடன் நிறைவுறுகிறது.
   
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai