சுடச்சுட

  

  புதுச்சேரி லாஸ்பேட்டை நாவலர் நெடுஞ்செழியன் அரசு மேல்நிலைப் பள்ளியில் மண்டல, மாநில அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை தொடங்கியது. புதுவை கல்வி அமைச்சர் கமலக்கண்ணன் கண்காட்சியைத் தொடக்கிவைத்துப் பார்வையிட்டார்.
  கல்வித் துறை சார்பில், மண்டல மற்றும் மாநில அளவிலான அறிவியல் கண்காட்சி அக்டோபர் 28-ஆம் தேதி தொடங்கி நவம்பர் 6-ஆம் தேதி வரை நடைபெறும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
  இந்தக் கண்காட்சியில்,  "நிலைத்த முன்னேற்றத்துக்கான புதிய கண்டுபிடிப்புகள்' என்ற தலைப்பில் தொடக்க நிலை, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலை ஆகிய பிரிவுகளில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த மாணவ, மாணவிகளின் அறிவியல் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
  மேலும், ஆரோக்கியம், நல்வாழ்வு, வளங்களின் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு, கழிவு மேலாண்மை, நீர்வளப் பாதுகாப்பு, போக்குவரத்து, தகவல் தொடர்பு, மின்னணு, தொழில்நுட்ப தீர்வுகள், கணித மாதிரிகள் தொடர்பான படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.
  இந்த அறிவியல் கண்காட்சியைக் கல்வி அமைச்சர்
  இரா.கமலக்கண்ணன் தொடக்கி வைத்தார். பேரவைத் துணைத் தலைவர் சிவக்கொழுந்து, இயக்குநர் ல.குமார், கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.
  நடுநிலையில் அளவில் 118 படைப்புகளும், உயர்நிலையில் 108 படைப்புகளும், மேல்நிலையில் 45 படைப்புகளும், ஆசிரியர்கள் சார்பில் 45 படைப்புகளும் மொத்தம் 359 அறிவியல் படைப்புகள் இடம் பெற்றுள்ளன.
  கண்காட்சியில் தேர்வு செய்யப்படும் மாணவர்கள் மேற்கு வங்கத்தில் நவம்பர் 3, 4 மற்றும் 6-ஆம் தேதிகளில் நடைபெறும் மாநில அளவிலான கண்காட்சியில் கலந்து கொள்வார்கள். மூன்று நாள்கள் மண்டல அளவிலும், மூன்று நாள்கள் மாநில அளவிலும் நடைபெறும் இந்தக் கண்காட்சியை அனைத்துப் பள்ளி மாணவர்களும் பார்வையிட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  கண்காட்சியைத் தொடக்கி வைத்த பின்னர், கல்வி அமைச்சர்  கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  புதுச்சேரியில் தற்போது அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்குப் பல்வேறு சலுகைகளை அரசு செய்து வருகிறது. மேலும், தனியார் பள்ளிகளுக்குக் கல்விக் கட்டணம் நிர்ணயம் செய்ய  நீதிமன்றம் உத்தரவு  பிறப்பித்தது. அதனடிப்படையில், கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதை மீறி, தனியார் பள்ளிகள் கட்டணம் வசூலிக்கக் கூடாது.
  அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து புகார்கள் வந்தால், புகார் வந்த தனியார் பள்ளி மீது நடவடிக்கை எடுக்கப்படும்.  பள்ளியின் உரிமை ரத்து செய்யப்படும்.
  தனியார் பள்ளிகள் "நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற வைக்கவேண்டும் என்ற நோக்கில், அதற்கான பயிற்சிகளை வழங்கி வருகிறது.
  புதுச்சேரி அரசுப் பள்ளிகளிலும் கடந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்பு  மாணவர்களுக்கு "நீட்' தேர்வுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அரசுப் பள்ளிகளில் அனைத்து விதமான வசதிகளும் உள்ளன. பாடத்திட்டத்தை முழுமையாகப் படித்தாலே "நீட்' தேர்வில் வெற்றி பெற முடியும் என்றார் அமைச்சர் கமலக்கண்ணன்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai