Enable Javscript for better performance
டெங்கு பேரிடர் தடுப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    காலாப்பட்டு தொகுதியில் டெங்கு பேரிடர் தடுப்பு முகாமை வருவாய்த் துறை அமைச்சர் எப்.ஷாஜகான் சனிக்கிழமை தொடக்கி வைத்தார்.
    புதுவையில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எதிர்கொள்ளும் வகையில், சிறப்புப் பேரிடர் முகாம்கள் நடத்தப்படும் என வருவாய்த் துறை அமைச்சர் ஷாஜகான் அறிவித்தார்.  அதன்படி, முதல் தடுப்பு முகாம் பெரியகாலாப்பட்டு சுனாமிக் குடியிருப்பில் தொடங்கப்பட்டது. உழவர்கரை நகராட்சி, பேரிடர் மேலாண்மைத் துறை ஆகியவை சார்பில், முகாமைத் தொடக்கி வைத்து அமைச்சர் ஷாஜகான் பேசியதாவது:
    பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு தீவிரமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களும் உரிய விழிப்புணர்வுடன் இருந்தால் மட்டுமே அரசின் திட்டங்கள் வெற்றி பெறும். தங்களது சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதன் மூலமும், தண்ணீர் தேங்க விடாமலும் பார்த்துக் கொள்வதன் மூலமும் கொசுக்களால் வரும் நோய்களைத் தடுக்க முடியும்.  வடிகால்களில் அடைப்புகளை ஏற்படுத்தக் கூடாது. மழை, புயல் உள்ளிட்ட பேரிடர் காலங்களில் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றார் அவர்.
    மாவட்ட ஆட்சியர் சத்யேந்திர சிங் துர்சாவத், சுகாதார இயக்குநர் கேவி.ராமன், நகராட்சி ஆணையர் ரமேஷ், பைலேரியா இணை இயக்குநர் செல்வராஜ், அமைச்சரின் தனிச் செயலர் தமிழ்ச்செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
    நகராட்சி ஊழியர்கள் 200 பேரும், சுகாதாரத் துறை ஊழியர்கள் 120 பேரும் இணைந்து துப்புரவுப் பணிகளை மேற்கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai