சுடச்சுட

  

  புதுவை பல்கலைக்கழகத்துக்கு துணைவேந்தர் நியமிக்கப்படுவது எப்போது?

  By பா.சுஜித்குமார்  |   Published on : 29th October 2017 07:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  நேர்காணல் நடைபெற்று முடிந்து 6 மாதங்கள் ஆகியும், புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாத அவல நிலைக்கு புதுவை மத்திய பல்கலைக்கழகம் தள்ளப்பட்டுள்ளது.
  புதிய துணைவேந்தர் நியமனத்தில், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அலட்சியப் போக்குடன் செயல்படுவதால் நாளுக்கு நாள் பல்கலை. நிர்வாகம் சீர்குலைந்து வருவதாக பேராசிரியர்களும் மாணவர்களும் புகார் கூறினர்.
  இந்தப் பல்கலை.யில் தற்போது 37 துறைகள், 15 பள்ளிகள், 10 மையங்கள் மூலம் 175 இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகள் கற்பிக்கப்படுகின்றன.
  காலாப்பட்டில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தோடு, காரைக்கால், அந்தமான் நிகோபார் தீவிலும் துணை வளாகங்கள் செயல்படுகின்றன. 2 லட்சம் நூல்கள் கொண்ட நூலகம், 19 மாணவ, மாணவிகள் விடுதிகள், வைஃபை வசதி கொண்ட வளாகத்தில்  சுமார் 400 பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், அலுவலர்கள் பணியாற்றுகின்றனர்.  6,100 மாணவர்கள் கல்வி பயில்கின்றனர். மேலும் 87 இணைப்புக் கல்லூரிகளில் 45 ஆயிரம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.
  தென்னிந்தியாவின் சிறந்த கல்விக் கேந்திரமாக விளங்கும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாகப் பல்வேறு பிரச்னைகள் எழுந்தன. அப்போதைய துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக முறைகேடு புகார்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என கடும் நெருக்கடி ஏற்பட்டது. பின்னர், துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவி நீக்கம் செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். தற்போது அனிஷா பஷீர்கான் துணைவேந்தர் (பொ) வகித்து வருகிறார்.
  32 ஆண்டுகள் பழைமையான புதுவை மத்திய பல்கலைக்கழகம், மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையால் செயல்படாத பல்கலைக்கழகங்கள் என்ற பட்டியலில் ஏனைய 10 மத்திய பல்கலைகழகங்களோடு சேர்க்கப்பட்டது.
  இந்த நிலையில், பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய ஹிமாச்சலப் பிரதேச மத்தியப் பல்கலை. துணைவேந்தர் குல்தீப்சந்த் அக்னிஹோத்ரி, இந்திரா காந்தி தேசியப் பழங்குடியினர் பல்கலை. துணைவேந்தர் டிவி.கட்டமணி, ஜாதவ்பூர் பல்கலை முன்னாள் துணைவேந்தர் பிரதீப் நாராயண கோஷ் கொண்ட தேர்வுக் குழு அமைக்கப்பட்டது.
  இந்தக் குழு மொத்தம் 400 பேரிடம் இருந்து பெற்ற விண்ணப்பங்களைப் பரிசீலித்து, அதிலிருந்து 14 பேரை தேர்வு செய்தது.
  தகுதி வாய்ந்த புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் பொருட்டு, கடந்த மார்ச் மாதம் 29-ஆம் தேதி புதுதில்லியில் 14 பேரிடமும் தனிப்பட்ட முறையில் நேர்காணல் நடைபெற்றது.
  இறுதியில் 3 பேர் கொண்ட பட்டியலை மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் தேர்வுக் குழு சமர்ப்பித்தது. ஆனால், இதுவரை புதிய துணைவேந்தர் நியமனம் பற்றிய அறிவிப்பு வெளியாகவில்லை.
  இதனால், பல்கலைக்கழக நிர்வாகம், நியமனங்கள் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்க முடியாமல் சிக்கலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. தற்போதைய பொறுப்பு துணைவேந்தர் அனிஷா பஷீர்கான் மீதும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. போலி ஆவணங்கள் மூலம் பதவி நீட்டிப்புப் பெற்றதாகவும், ஆள்கள் நியமனத்தில் முறைகேடுகள் புரிந்ததாகவும் பல்கலைக்கழக ஊழியர்கள் கூட்டு நடவடிக்கைக் குழுவினர் புகார் எழுப்பினர்.
  இதேபோல, முக்கியப் பணியிடங்களான பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டாளர், நிதி அதிகாரி போன்ற பதவிகளிலும் நிரந்தர அதிகாரிகள் நியமிக்கப்படாமல் பொறுப்பு அதிகாரிகளே உள்ளனர். மேலும், மேற்பார்வைப் பொறியாளர், முன்னோடித் திட்டங்கள் துறை இயக்குநர், கலாசார உறவுகள் துறை இயக்குநர், விளையாட்டுத் துறை இயக்குநர், கல்லூரி மேம்பாட்டு மைய முதன்மையர், சமுதாயக் கல்லூரி முதல்வர்,  முதன்மையர், மாணவர் நலன் இயக்குநர், தொலைதூரக் கல்வி உள்ளிட்ட பணியிடங்களும் பல ஆண்டுகளாக காலியாகவே உள்ளன. இதுகுறித்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தரப்பில் கூறப்பட்டதாவது: பல்கலைக்கழகம் சிறப்பாக இயங்க முடியாத நிலை உள்ளது.
  பல்கலை. பாடப் பிரிவுகளில் புதுவை மாணவர்களுக்கு 25 சதவீத இட ஒதுக்கீடு, பேராசிரியர்கள், அதிகாரிகளுக்குப் பதவி உயர்வு, முனைவர் பட்டப் படிப்பில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒதுக்கீடு, நீண்ட நாள் கட்டண கேட்பு கோரிக்கைள் நிலுவையில் உள்ளன. முதல் 10 இடங்களில் இருந்த பல்கலைக்கழகம் தற்போது 59-ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. புதிய துணைவேந்தர் நியமிக்கப்பட்டால் மட்டுமே பல்கலை.யைச் சீரழிவில் இருந்து மீட்க முடியும் என்றனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai