சுடச்சுட

  

  முதலியார்பேட்டை ரெளடி சின்னசெல்வம் கொலை வழக்கு தொடர்பாக 8 பேரை போலீஸார் கைது செய்தனர்.
  உப்பளம் முதலியார்பேட்டை உடையார்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர்  செல்வம் (எ) சின்னசெல்வம் (34). ரெளடியான இவர் மீது, கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. குறிப்பாக, 2014-ஆம் ஆண்டு பாமக பிரமுகர் அகோரம் மூர்த்தி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி இவர். இந்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த இவர், ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல்வேறு தொழில்களைச் செய்து வந்தார்.
  இந்த நிலையில், கடந்த 23-ஆம் தேதி சின்னசெல்வம் தனது வீட்டின் அருகே நின்றிருந்தபோது 5 பைக்குகளில் வந்த கும்பல் அவரை ஓட ஓட விரட்டிக் கொலை செய்தது.
  இதைத் தொடர்ந்து, முதலியார்பேட்டை காவல் ஆய்வாளர் பாபுஜி தலைமையிலான போலீஸார்  வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், எஸ்.பி. அப்துல் ரஹீம் தலைமையில் காவல் ஆய்வாளர் பாபுஜி, காவல் உதவி ஆய்வாளர்கள் தமிழரசன், ராஜன் ஆகியோர் கொண்ட தனிப்படை  அமைக்கப்பட்டு குற்றவாளிகளைத் தேடி வந்தனர்.
  முதல் கட்ட விசாரணையில், உடையார் தோட்டம் பகுதியில் கோயில் கட்டுவதில் சின்னசெல்வத்துக்கும், சக்திவேல் தரப்பினருக்கும் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது தெரிய வந்தது. மேலும், தேங்காய்த்திட்டு பகுதியில் மண்புழு குத்தகை எடுப்பது தொடர்பாகவும் இருதரப்புக்கும் இடையே தகராறு இருந்தது.
  இந்த நிலையில், சின்னசெல்வம் கொலையில் தொடர்புடையவர்கள் தமிழகப் பகுதிகளில் தலைமறைவாக இருப்பது விசாரணையில் தெரிய வந்தது.
  தொடர் தேடுதலையடுத்து, உடையார்தோப்பு ரமேஷ் (35), மணிவண்ணன் (25), ரகுராமன் (23), வானரப்பேட்டை அர்ச்சுனன் (37), நடராஜன் (31), கீழ்புத்துப்பட்டு ஜனா (18), லாஸ்பேட்டை அசோக் (24), திருச்சிற்றம்பலம் கூட்டுரோடு மூர்த்தி (33) உள்ளிட்ட 8 பேரை தனிப்படையினர் கைது செய்தனர்.
  ரெளடி சின்னசெல்வத்துக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சக்திவேலுக்கும் தொழில் போட்டி இருந்ததும், இதனால் சக்திவேல் தரப்பு சின்னசெல்வத்தை கொல்ல கூலிப் படையை ஏவியதும் தெரிய வந்தது. கொலை செய்வதற்காக ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது விசாரணையில் தெரிய வந்தது. கைதானவர்களிடம் இருந்து கத்திகள், செல்லிடப்பேசிகள், பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், தலைமறைவாக உள்ள இதர குற்றவாளிகளான சக்திவேல், ஜீவா, திலீப் ஆகியோரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

   

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai