சுடச்சுட

  

  வக்ஃபு வாரிய சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு வருமா? இஸ்லாமியர்கள் எதிர்பார்ப்பு

  By DIN  |   Published on : 30th October 2017 09:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவை உப்பளம் தொகுதியில் உள்ள வக்ஃபு வாரிய சமுதாய நலக்கூடம் பயன்பாடின்றி பூட்டியே வைக்கப்பட்டுள்ளதால்,  இஸ்லாமியர்கள் சுபநிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.
  புதுச்சேரியில் உப்பளம், சுல்தான்பேட்டை, நெல்லித்தோப்பு, உருளையன்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான இஸ்லாமியர்கள் வசித்து வருகின்றனர். புதுச்சேரியில் வக்ஃபு வாரிய கட்டுப்பாட்டின் கீழ் 28 பள்ளிவாசல்கள் மற்றும் பல்வேறு சொத்துகள் வருகின்றன.
  உப்பளம் ஏனம் வெங்கடாசல பிள்ளை வீதியில் வக்ஃபு வாரிய அலுவலகம் உள்ளது. தொழில்துறை அமைச்சர் ஷாஜஹான் தலைமையில் வாரியம் இயங்கி வருகிறது.
  இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று அந்தப் பகுதியில் சமுதாய நலக்கூடம் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டி திறக்கப்பட்டது.  4 மாடிகள் கொண்ட இந்த சமுதாயக் கூடத்தில் வக்ஃபு வாரியம், ஹஜ் கமிட்டி அலுவலகங்கள் இயங்கி வருகின்றன.
  முதலிரண்டு மாடிகள் விசேஷ நிகழ்ச்சிகள் நடத்தவும்,  உணவருந்தும் கூடத்துக்கும் அனுமதிக்கப்பட்டுள்ளது. கடந்த முறை காங்கிரஸ் ஆட்சியின் போது சுமார் ரூ.65 லட்சம் மதிப்பில் சமுதாயக் கூடம் கட்டும் பணி நடைபெற்றது.   பின்னர், நிதித் தட்டுப்பாட்டால் சமுதாய நலக்கூடத்தின் கட்டுமானப் பணிகள் சிறிது சிறிதாக நடைபெற்றன.   கடந்த என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியின்போது, வாரியத் தலைவராக இருந்த அப்துல்ரஹ்மான் முயற்சியில் மின்தூக்கி (லிப்ட்) அமைக்கப்பட்டது. இச்சமுதாய நலக்
  கூடம் கட்ட ரூ.1.5 கோடி செலவாகியது,.
  இந்நிலையில் பணிகள் நிறைவடைந்தும் சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு வராததால், உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அன்பழகன் தலைமையில் போராட்டம் நடத்தியும், சமுதாய நலக்கூடம் மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பபடவில்லை.
  இதுதொடர்பாக தமிழக மக்கள் ஜனநாயக கட்சி அமைப்பாளர் எம்.ஏ.அஷ்ரப் கூறியதாவது:
  சமுதாய நலக்கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதற்காக பலகட்ட போராட்டங்கள் நடத்தியும் பலனில்லை. ஏழை இஸ்லாமியர்கள் பெருந்தொகை செலவு செய்து சுபநிகழ்ச்சிகளை வெளி இடங்களில் நடத்த வேண்டியுள்ளது. சமுதாய நலக்கூடத்தை திறக்க வலியுறுத்தி ஆளுநர், முதல்வரிடமும் கோரிக்கை மனுக்கள் அளித்தும் பலனில்லை என்றார்.
    இதுகுறித்து வாரிய வட்டாரங்களில் கேட்டபோது,  சமுதாய நலக்கூடத்துக்குத் தேவையான மேசை, நாற்காலிகள், சுப நிகழ்ச்சிகள் நடத்துவதற்கான பாத்திரம், பண்டங்கள் போன்றவை இன்னும் வாங்கப்படவில்லை. இதற்கு நிதித் தட்டுப்பாடே காரணம். இதனால் தான் சமுதாய நலக்கூடம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது எனத் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai