சுடச்சுட

  

  எம்.எல்.ஏ.விடம் காவல் துறை அத்துமீறல்: மார்க்சிஸ்ட் கண்டனம்

  By DIN  |   Published on : 31st October 2017 01:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  அதிமுக எம்.எல்.ஏ. வையாபுரி மணிகண்டனிடம் காவல்துறை அத்துமீறி நடந்து கொண்டதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்தது.
  இதுகுறித்து அந்தக் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்ட அறிக்கை:
  பொதுமக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட முத்தியால்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ.விடம் மோசமான முறையில் காவல்துறையினர் செயல்பட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம்.
  சம்பந்தப்பட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மின் கட்டண உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு, வீட்டு வரி உயர்வு மற்றும் ஜி.எஸ்.டி, பண மதிப்பிழப்பு, பெட்ரோல் விலை உயர்வு , எரிவாயு விலை உயர்வு உள்ளிட்டவற்றால் மக்களின் வாழ்க்கை சிக்கலாகி உள்ளது.
  புதுச்சேரி நகரப் பகுதியில் பல இடங்களில் மக்களின் கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்கள், கூட்டங்கள் நடத்திட அனுமதி வழங்கப்பட்டு வந்தது. தற்போது அரசின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்ற எந்தவொரு செயல்பாட்டையும் நகரப் பகுதியில் நடத்துவதற்கு காவல் துறையினர் அனுமதி வழங்குவது இல்லை.
  காவல் துறையின் இத்தகைய நடவடிக்கைகள் அரசியல் சட்டம் மக்களுக்கு வழங்கியுள்ள உரிமையை கேள்விக்குறியாக்கும் செயலாகும்.
  மக்கள் பிரச்னைகளை மூடி மறைக்கும் போக்கும், ஜனநாயக போராட்டங்களை உதாசீனப்படுத்தும் தன்மையும் காவல் துறை உயர்மட்ட அதிகாரிகளிடம் உள்ளதையே இது காட்டுகிறது.
  பொதுமக்கள் மத்தியில் சட்டப்பேரவை உறுப்பினரின் சட்டையை பிடித்து இழுக்கும் காவல் துறையின் செயல் பொதுமக்களிடம் எத்தகைய அணுகுமுறையை காவல் துறையினர் கடைப்பிடித்து வருகின்றனர் என்பதை எடுத்துக்காட்டியுள்ளது.
  புதுச்சேரியில் கொலைக் குற்றங்களும், போதைப்பொருள் விற்பனை, லாட்டரி விற்பனை, வழிப்பறி சம்பவங்களும் அதிகரித்துள்ளன.
  காவல் துறையின் தலைமை பொறுப்பில் உள்ளவர்களின் செயல்பாடு நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறதா என்கிற சந்தேகம் பொதுமக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆகவே, காவல் துறையின் அத்துமீறல்களை தடுத்து நிறுத்தவும், மக்களின் நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து போராடவும் முன்வரவேண்டும் என கேட்டுக் கொண்டார் ஆர்.ராஜாங்கம்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai