சுடச்சுட

  

  செயல் திறனற்ற 30 சதவீத அரசு ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்பலாம்: அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு

  By DIN  |   Published on : 31st October 2017 01:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுச்சேரியில் செயல் திறனற்ற 30 சதவீத அரசு ஊழியர்களை விருப்ப ஓய்வில் அனுப்பலாம் என அரசு ஊழியர் மத்திய கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பி.லட்சுமணசாமி யோசனை தெரிவித்தார்
  அவர் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:
  கடந்த 2007-ஆம் ஆண்டு புதுச்சேரி பொது கணக்கு நிதி உருவாக்கப்பட்டது. அப்போது, புதுச்சேரி மாநிலத்தின் கடன் ரூ.2,170 கோடியாகும். ஆண்டுதோறும் கடன் வாங்கியதால் தற்போது கடன் ரூ.8,480 கோடியாக உள்ளது. தனி கணக்கு தொடங்கி 10 ஆண்டுகள் முடிந்துவிட்டதால் விதிப்படி இந்த நிதியாண்டில் இருந்து வட்டியுடன் கூடிய முதலும் சேர்த்து சராசரியாக ஆண்டுதோறும் ரூ.1,200 கோடி மத்திய அரசு வரி வருவாயில் இருந்து எடுத்துக் கொள்ளும்.
  அதேசமயம், ஜிஎஸ்டி அமலானதால் ரூ.400 கோடி வரி வருவாய் குறைகிறது. மேலும், பெட்ரோல், டீசலுக்கும் ஜிஎஸ்டி அமல்படுத்தினால் மேலும் ரூ.300 கோடி குறையும். புதுச்சேரி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது.
  இதனால் பொதுப்பணித் துறையின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. சுகாதாரத்துறை மருந்துகள் வாங்கியதற்கான பணம் ரூ.50 கோடி வரை தராமல் உள்ளது. மாணவர்களுக்கு வழங்கப்படும் சைக்கிள் தராமல் நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.
  அரசுத் துறை ஊழியர்களுக்கு பஞ்சப்படி, வீட்டு வாடகைப்படி மற்றும் நிலுவைத்தொகை வழங்கப்படவில்லை. ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அடிப்படையில் ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. பொதுப்பணித் துறையில் 1300 தினக்கூலி ஊழியர்களுக்கு 8 மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. அரசு சார்பு நிறுவனங்களில் பணியாற்றும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு பல ஆண்டுகளாக சம்பளம் வழங்கப்படவில்லை. மகளிர் ஆணையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 75 மாதம் சம்பளம் வழங்காமல் உள்ளது.
  புதுச்சேரியில் இருப்பது உண்மையான நிதி நெருக்கடி இல்லை. திறமையான, நேர்மையான அரசு ஊழியர்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை. அரசு விதிகளை புறம் தள்ளுபவர்களே ஊக்குவிக்கப்படுகின்றனர். அவர்களுக்கே பல துறைகள் ஒதுக்கித் தரப்படுகிறது.
  பிற மாநிலங்களை ஒப்பிட்டால் புதுச்சேரியில் மக்களுக்கான பணிகளை விரைந்து செய்ய இரண்டு மடங்கு அரசு ஊழியர்கள் உள்ளனர். இதே நிலை நீடித்தால் மத்திய அரசு இன்னும் 2 அல்லது 3 மாத காலத்தில் அவசர நிலையை பிரகடனம் செய்யும். அதன் பின்னர், மத்திய அரசே புதுச்சேரியில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொள்ளும். வருமானம் இல்லாத அரசு சார்பு நிறுவனங்களை மூடும். 50 சதவீத அரசு ஊழியர்களை பணியில் இருந்து நீக்கும்.
  எனவே, அதற்கு முன்பாக புதுச்சேரி அரசே புதுச்சேரியில் உள்ள திறமையற்ற அரசு அதிகாரிகள் 30 சதவீதம் பேரை விருப்ப ஓய்வில் அனுப்ப வேண்டும்.
  டெல்லியில் உள்ள அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை மத்திய அரசே வழங்கி வருகிறது. அதுபோல, புதுச்சேரியில் உள்ள ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கான ஓய்வூதியத்தை மத்திய அரசே வழங்க முதல்வரும், ஆளுநரும் மத்திய அரசை வற்புறுத்த வேண்டும். இதன் மூலம் அரசுக்கு ரூ.650 கோடி மிச்சமாகும்.
  தேர்தலில் பணம் வாங்கியதன் மூலம் குற்றம் செய்ய ஆட்சியாளர்களுக்கு மக்கள் உரிமம் வழங்கிவிட்டனர்.
  அதனால் ஆட்சியாளர்களிடம் நேர்மையை எதிர்பார்க்க முடியாது. புதுச்சேரியை சீரமைத்து முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல மக்கள் இயக்கம் நடத்த உள்ளோம் என்றார் லட்சுமணசாமி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai