சுடச்சுட

  

  டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள்: அதிகாரிகளுடன் ஆளுநர் ஆலோசனை

  By DIN  |   Published on : 31st October 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்க வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் திங்கள்கிழமை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ஆலோசனை நடத்தினார்.
  புதுவையில் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. துணைநிலை ஆளுநர் கிரண் பேடியும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அவ்வப்போது ஆய்வுகள் மேற்கொண்டு, அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்து வருகிறார்.
  இந்த நிலையில், டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த இதுவரை மேற்கொள்ளபட்ட பணிகள் குறித்தும், இனி வரும் நாள்களில் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், ஆளுநர் கிரண் பேடி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
  இதில் மாவட்ட ஆட்சியர் சத்யேந்திரசிங் துர்சாவத், சுகாதாரத் துறை இயக்குநர் ராமன், நகராட்சி ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். ஆளுநர் கிரண் பேடி அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.
  குறிப்பாக, டெங்கு காய்ச்சல் அதிகம் உள்ள பகுதிகளுக்குச் சென்று அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
  மேலும் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், மழையை எதிர்கொள்வது குறித்தும், எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
  இதுதொடர்பாக ஆளுநர் கிரண் பேடி கூறியதாவது :
  டெங்கு பாதிப்பை தடுக்கும் வகையில் அனைத்துத் துறைகள் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் தொடர் நடவடிக்கைக்கான செயல்திட்டம் குறித்து கேட்டுள்ளேன். அனைவரும் இதை ஆவணப்படுத்தி, அறிக்கையாக தயாரித்து அனைவருக்கும் விநியோகம் செய்ய வேண்டும்.
  முக்கியமாக வீடு வீடாகச் சென்று ஆய்வு, கொசு மருந்து அடித்தல், டெங்கு கொசுக்கள் பரவ காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்வது, அபராதம் விதிப்பது, நீதிமன்றத்தில் பணத்தை செலுத்துமாறு செய்தல், அபராதம் விதிக்கப்பட்டவர்களே நகராட்சி அலுவலரிடம் செலுத்த வேண்டுமா அல்லது நீதிமன்றம் சென்று கட்டுவதா என முடிவு செய்யலாம்.
  மேலும் குற்றத்தை உறுதிப்படுத்தவும், பிரச்னை நேராமல் இருக்கவும், செல்லிடப்பேசியிலும் பதிவு செய்யப்படும் என்றார் கிரண் பேடி.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai