சுடச்சுட

  

  நவ.8-இல் புதுவையில் 5 இடங்களில் போராட்டம்: இடதுசாரிகள், விசிக அறிவிப்பு

  By DIN  |   Published on : 31st October 2017 01:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்டு ஓராண்டாவதை முன்னிட்டு நாடு தழுவிய எதிர்ப்பு தினமாக வரும் நவ.8-ஆம் தேதி புதுவையில் 5 இடங்களில் போராட்டம் நடத்தப்படும் என இடதுசாரிகள்- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அறிவித்துள்ளன.
  பணமதிப்பு நீக்க அறிவிப்பு தினமான நவம்பர் 8-ஆம் தேதியை பாஜக அரசுக்கு எதிரான போராட்ட தினமாக கடைப்பிடிப்பது என்று இடதுசாரிகள் தேசிய அளவில் அறிவித்துள்ளதைத் தொடர்ந்து, புதுச்சேரியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில அலுவலகத்தில் திங்கள்கிழமை மாலை இடதுசாரிகள்-விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் ஆர்.விஸ்வநாதன் தலைமை வகித்தார்.
  இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேசியக்குழு உறுப்பினர் நாரா.கலைநாதன், மாநில துணைச் செயலாளர்கள் அ.இராமமூர்த்தி, அ.மு.சலீம், பொருளாளர் வி.எஸ்.அபிஷேகம் நிர்வாகக்குழு உறுப்பினர் கே.முருகன் ஆகியோரும், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் மாநிலக்குழு உறுப்பினர் வெ.பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், பிரதேசக்குழு உறுப்பினர் டி.முருகன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் கார்முகில், பாத செம்மல் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் (எம்.எல்.) சார்பில் மாநிலச் செயலாளர் சோ.பாலசுப்பிரமணியன், ஜி.பழனி, எஸ்.புருஷோத்தமன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  கூட்டத்துக்குப் பிறகு கூட்டணி தலைவர்கள் கூறியதாவது:
  கடந்த ஆண்டு மத்திய பாஜக அரசு அறிவித்த பணமதிப்பு நீக்கம் என்பது இந்திய பொருளாதாரத்தை மிகக் கடுமையான சிதைவுக்கு உள்ளாக்கிவிட்டது. பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க அறிவிப்பு, தன்னிச்சையாகவும் அறிவிக்கப்பட்டு ஓராண்டு ஆகிவிட்டது.
  பெருவாரியான மக்கள் மீது முன் எப்போதும் இல்லாத சுமைகளை ஏற்றியிருக்கிறது.
  பணமதிப்பு நீக்கத்திற்குக் காரணமாக பாஜக அரசால் சொல்லப்பட்ட இலக்குகள் எதுவும் எட்டப்படவில்லை. கருப்புப் பணம் பதுக்கியிருந்த ஒரு நபர் கூட தண்டிக்கப்படாமல் ஒட்டுமொத்த கருப்புப் பணமும் வெள்ளையாக மாற்றப்பட்டுள்ளது. இதனால், ஒடுக்கப்பட்ட ஏழை, எளிய மக்களின் வாழ்வு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கிராமப்புற வாழ்வாதாரம் சிதைந்துள்ளது. இவற்றிற்கு பன்னாட்டு மற்றும் உள்நாட்டு பெருநிறுவனங்களுக்கு ஆதரவான பாஜக கொள்கையே காரணம்.
  பணமதிப்பிழப்பு நடவடிக்கை ஓராண்டாகும் நிலையில், வரும் 8.11.2017-இல் பாகூர் யூகோ வங்கி, வில்லியனூர் இந்தியன் வங்கி, திருக்கனூர் இந்தியன் வங்கி, பிருந்தாவனம் பாரத ஸ்டேட் வங்கி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஐந்து மையங்களில் போராட்டம் நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
  போராட்டத்துக்கு ஜனநாயக, முற்போக்கு இயக்கங்களும் பொதுமக்களும் ஆதரவு அளிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர்.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai