சுடச்சுட

  

  புதுவையில் போலி முகவரி கொடுத்து நடிகை கார் வாங்கிய விவகாரம்: விசாரிக்க ஆளுநர் உத்தரவு

  By DIN  |   Published on : 31st October 2017 01:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  புதுவையில் போலி முகவரி அளித்து நடிகை அமலாபால் சொகுசு கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்த துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
  பிற மாநிலங்களைக் காட்டிலும் யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் சொகுசு கார்களுக்கான வரி குறைவாக உள்ளது. இதனால், வெளி மாநிலத்தவர் பலர் போலி புதுச்சேரி முகவரியை போக்குவரத்துத் துறையில் பதிவு செய்து வாகனங்களை வாங்கிப் பயன்படுத்தி வருகின்றனர்.
  இதற்கிடையே, பிரபல நடிகையான அமலாபால் தான் வாங்கிய விலை உயர்ந்த பென்ஸ் சொகுசு காரை புதுச்சேரியில் போலி முகவரி அளித்து பதிவு செய்துள்ளதாகப் புகார் எழுந்தது. கேரள மாநிலத்தில் சொகுசு காருக்கு அதன் விலையில் 20 சதவீதம் சாலை வரியாகச் செலுத்த வேண்டும். ஆனால், புதுவையில் மிகவும் குறைவான வரி செலுத்தினால் போதும்.
  ரூ.1.5 கோடி மதிப்பிலான பென்ஸ் காரை கேரளத்தில் பதிவு செய்தால் ரூ.20 லட்சம் சாலை வரியாக செலுத்துவதைத் தவிர்ப்பதற்காக, புதுவையில் போலி முகவரி அளித்து நடிகை அமலாபால் ரூ.1.15 லட்சம் மட்டும் வரியாகச் செலுத்தி அந்த காரை பதிவு செய்து வாங்கியதாகத் தெரிகிறது. இந்தப் பிரச்னை தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை அறிந்த கேரள போக்குவரத்துத் துறை விசாரணை நடத்தி வருகிறது.
  இதுகுறித்து செய்திகள் வெளியானதை அடுத்து, புதுச்சேரி போக்குவரத்துத் துறை ஆணையர் சுந்தரேசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, நடிகை அமலாபால் புதுச்சேரியில் போலி முகவரி கொடுத்து கார் வாங்கியது எதுவும் தனக்குத் தெரியாது என்றார்.
  நடிகை அமலாபால் கார் வாங்கிய விவகாரம் தொடர்பாக ஆளுநர் கிரண் பேடி கூறியிருப்பதாவது:
  இதுபோன்ற செயல்பாடுகளை நிறுத்த வேண்டும். இந்தச் செயல் நீண்ட காலமாகவே தொடர்வதாகத் தெரிகிறது. இதுபோன்ற செயல்களை போக்குவரத்துத் துறை ஆணையர் தடுக்க வேண்டும். நடிகை அமலாபால் கார் வரி ஏய்ப்பு மோசடி குறித்து 15 நாள்களுக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்.
  கார் வாங்குவதற்கு தரப்பட்ட முகவரி போலியானதாக உள்ளது. நடிகை அமலாபாலுக்கு புதுச்சேரி முகவரியுடன் கூடிய எல்ஐசி பத்திரம், அடையாள அட்டை எவ்வாறு கிடைத்தது. முகவரியில் இருப்பவர் நடிகை அமலாபாலின் உறவினர் எனக் கூறுகிறார். ஆனால், பெயரை மறைக்கிறார்.
  வெளி மாநிலத்தவருக்கு ஏன் குறைவான சாலை வரியை புதுவையில் வசூலிக்கின்றனர். எத்தனை திரைப்பட நடிகர்கள் புதுவையில் இதேபோல கார்களை வாங்கி உள்ளனர் எனக் கண்டறிய வேண்டும். நடிகை அமலாபாலின் செயலால் வருவாய் இழப்பு, மோசடி, ஏமாற்றியதற்கான அடிப்படை முகாந்திரம் உள்ளது.
  ஆவணங்களை முறைகேடாகப் பயன்படுத்தி, குறைக்கப்பட்ட வரிச் சலுகையைப் பெற்றுள்ளார். போலீஸார் உடனே வழக்குப் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.
  வேறு மாநில முகவரி கொடுத்து புதுச்சேரியில் கார் வாங்கினால் சாலை வரி அதிகளவில் செலுத்த வேண்டும் என்பதால், புதுச்சேரியில் வசிப்பதாக போலி முகவரி கொடுத்தோ அல்லது புதுச்சேரியில் வசிக்கும் உறவினர்கள் பெயரிலோ வாகனங்களை வாங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai