எம்.எல்.ஏ. அலுவலகம் உள்பட 16 கடைகள் ரூ.12.78 லட்சம் வரி பாக்கி இருப்பதாக தகவல் பெறும் உரிமை சட்டத்தில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து புதுவை ஆளுநர் கிரண் பேடிக்கு, ராஜீவ் காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பின் தலைவர் ரகுபதி திங்கள்கிழமை அனுப்பியுள்ள புகார் மனு: புதுவையில் உள்ள நகராட்சிகள் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகள் ஆகியவற்றுக்குச் சொந்தமான அங்காடிகளில் செயல்பட்டு வரும் கடைக்காரர்கள் மற்றும் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் ஆகியவை லட்சக்கணக்கில் வாடகை பாக்கி வைத்துள்ளன.
இதில், உழவர்கரை நகராட்சிக்கு உள்பட்ட அஜீஸ் நகரில் செயல்பட்டு வரும் அங்காடி குறித்து இந்திய தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல் கேட்டதற்கு, அவர்கள் மொத்தம் உள்ள 34 கடைகளில் 16 கடைகள் மட்டும் செயல்பட்டு வருவதாகவும், இவர்கள் வாடகை நிலுவை தொகையாக ரூ.12 லட்சத்து 78 ஆயிரத்து 540 ரூபாய் வைத்துள்ளனர் என்றும் தகவல் அளித்துள்ளனர்.
அதிலும் குறிப்பாக அரசு நிறுவனமான மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்பட்டு வரும் 3 கடைகள் மாதம்தோறும் ரூ.1,997 வீதம் மொத்தம் ரூ.ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 982 ரூபாய் வரி பாக்கி வைத்துள்ளது. அதேபோல் உழவர்கரை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் அலுவலகம் செயல்பட்டு வரும் 2 கடைகளும் மாத வாடகை ரூ.11,450 ஆகும்.
இந்த அலுவலகம் திறந்தது முதலே வாடகை செலுத்தாமல் மொத்தம் ரூ.2 லட்சத்து 74 ஆயிரத்து 800 நிலுவைத் தொகை பாக்கி வைத்துள்ளனர். இதே நிலைதான் அனைத்து நகராட்சி அங்காடிகளிலும் உள்ளது. அண்மையில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்துகள் ஆகியவற்றின் சொத்து வரி நிலுவை தொகை வைத்திருந்த பொதுமக்கள், முக்கிய பிரமுகர்களின் பெயர் பட்டியலை செய்தித்தாள்களில் வெளியிட்டு வசூலிக்க நடவடிக்கை எடுத்ததுபோல, புதுவையில் உள்ள நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்துகளுக்குச் சொந்தமான அங்கன்வாடிகளில் செயல்பட்டு வரும் கடைகள் மற்றும் அரசு, அரசு சார்ந்த நிறுவனங்கள் செலுத்த வேண்டிய வாடகை நிலுவை தொகைகளை செய்தித்தாள்களில் வெளியிட்டு வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் ரகுபதி.