காரைக்கால் துறைமுக இயக்குநர் பதவி விரைவில் நிரப்பப்படும் என்று ஆளுநர் கிரண் பேடியிடம் அமைச்சர் மு.கந்தசாமி தெரிவித்தார்.
இது குறித்து ஆளுநர் கிரண் பேடி தனது கட்செவி அஞ்சலில் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:
காரைக்கால் துறைமுகத்தில் நிலக்கரி கையாளப்படுவதால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்பு குறித்து வந்த புகார்களை தொடர்ந்து கடந்த மாதம் ஜூலை 21-ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டேன். அப்போது காரைக்கால் துறைமுக நிறுவன இயக்குநர் ரெட்டி, காற்றில் நிலக்கரி பரவாத வகையில் 13 மீட்டர் உயரத்தில் நிலக்கரி வைக்கும் இடம் உருவாக்கப்பட்டு வருகிறது. இப்பணி வரும் நவம்பரில் முடிவடையும்.
மேலும், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், துறைமுக பகுதிக்குள் நிலக்கரியை தார்பாலின் போட்டு எடுத்துச் செல்வது உள்ளிட்ட பணிகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
தெற்கு ரயில்வேயிடம் 10 கி.மீ. சுற்றளவில் தூய்மைப்படுத்தும் படி கேட்டுக் கொள்ளப்பட்டது. மேலும், நிலக்கரி எடுத்து வரும் ரயில் பெட்டிகளை சிறந்த முறையில் பராமரிக்கும்படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
ஆய்வுக்குப் பிறகு நிலக்கரி கையாளும் திட்டத்தை மாவட்ட ஆட்சியர் 2 வாரங்களுக்கு ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும், துறைமுகம் சுற்றுச்சூழல் பாதிக்காத வகையில் நவீன தொழில்நுட்பத்தை கையாள வேண்டும், துறைமுகம் இயக்கப்படுவதால் ஏற்படும் சமூக பொருளாதார பலன்கள் குறித்து 3 மாதத்தில் மதிப்பீடு தயாரிக்க வேண்டும், காரைக்கால் துறைமுக நிறுவனத்தின் சமூக பொறுப்புணர்வு திட்ட குழுவில் காரைக்கால் மாவட்ட ஆட்சியர் உறுப்பினராக சேர்க்கப்பட வேண்டும், நிறுவனம் இந்த ஆண்டு ரூ.70 லட்சம் சமூக பொறுப்புணர்வு திட்டத்தில் செலவிட முன்வந்துள்ளது.
காரைக்கால் துறைமுகம் புதுப்பிக்கவல்ல எரிசக்தி திட்டத்தின் கீழ் மின்சாரம் தயாரிக்க வேண்டும் என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் துறைமுக ஆய்வுப் பணி தொடர்பாக துறைமுக அமைச்சர் கந்தசாமியிடம் ஆலோசனை நடத்தப்பட்டபோது, துறைமுக பணியில் நிபுணத்துவம் பெற்ற ஒருவரை, காலியாக உள்ள துறைமுக இயக்குநர் பதவிக்கு நியமிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு அமைச்சர் கந்தசாமியும் விரைவில் நியமிப்பதாக ஒப்புக் கொண்டார் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.