மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி, புதுச்சேரியில் அரசுப் பேருந்துகள், தனியார் பேருந்துகள் இயங்கவில்லை. மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழில்சங்கத்தினர் 530 பேர் கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசின் மோட்டார் வாகனச் சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறக் கோரி, நாடு முழுவதும் போக்குவரத்து தொழில்சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர்.
அதன்படி, புதுவையிலும் போக்குவரத்து மற்றும் அதனைச் சார்ந்த தொழிலில் ஈடுபடும் அனைவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்யப்பட்டது. வேலைநிறுத்தப் போராட்டத்தை வலியுறுத்தி ஏஐடியுசி, சிஐடியு, தொமுச, என்ஆர்டியுசி, எல்எல்எப் உள்ளிட்ட தொழில்சங்கங்கள் பிரசாரம், துண்டுப் பிரசுரங்கள் மூலம் பொதுமக்கள், வியாபாரிகளிடம் ஆதரவு திரட்டினர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை முதல் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், புதுச்சேரியில் தனியார் பேருந்துகள் ஓடவில்லை. பெரும்பாலான அரசுப் பேருந்துகள், லாரி, வேன், ஆட்டோ, டெம்போ உள்ளிட்ட வாகனங்கள் இயங்கவில்லை.
பட்டறைகள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், தனியார் பள்ளிகள் இயங்கவில்லை. கடைகள், வணிக நிறுவனங்கள் வழக்கம்போல திறந்திருந்தன. இதனிடையே, ஏஐடியுசி தொழில்சங்க நிர்வாகிகள் சேதுசெல்வம், தினேஷ் பொன்னையா, ஐஎன்டியுசி நிர்வாகிகள் குமார், முத்துராமன், சிஐடியு நிர்வாகிகள் சீனிவாசன், குமார், தொமுச நிர்வாகிகள் அண்ணாஅடைக்கலம், முரளி, விடுதலைச் சிறுத்தைகள் தொழில்சங்க நிர்வாகிகள் செந்தில், லோடுகேரியர் சங்க நிர்வாகி முருகன் ஆகியோர் தலைமையில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பழைய பேருந்து நிலையம் அருகே இருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.
புதிய பேருந்து நிலையம் அருகே வந்த அவர்கள் அங்கு மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டதாக 530 பேரை போலீஸார் கைது செய்தனர்.