தொற்றா நோய் குறித்து கண்காணிக்க செயலி: ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் அறிமுகம் 

பொதுமக்களிடம் தொற்றா நோய் பாதிப்பு குறித்து கண்காணிக்க உதவும் செயலி, புதுவை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. 

பொதுமக்களிடம் தொற்றா நோய் பாதிப்பு குறித்து கண்காணிக்க உதவும் செயலி, புதுவை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.
 இது குறித்து புதுவை நலவழித் துறை இயக்குநர் ராமன் வெளியிட்ட செய்தி:
 தொற்றா நோயில் மிக முக்கியமான நோய்கள் மாரடைப்பு, பக்கவாதம், நீரிழிவு நோய், ரத்தக்கொதிப்பு, புற்றுநோய் ஆகிய நோய்களால் மட்டும் நமது நாட்டில் 60 சதவீதம் பேர் இறக்கின்றனர். இதில் 55 சதவீதம் பேர் நோயை கண்டறியாமலும், அதற்கான மருத்துவம் எடுத்துக் கொள்ளாததாலும் இறக்கும் நிலை உள்ளது.
 இந்த அனைத்து நோய்களினால் மரணம் ஏற்படுவதற்கான முக்கிய காரணம் இந்த நோய்கள் எந்த ஒரு அறிகுறியும் தொடக்கத்தில் நமக்கு தென்படாது.
 மாற்றாக அது நம்முடைய அனைத்து உறுப்புகளையும் பழுதாக்கிவிடும். எனவே, அறிகுறிகளை வெளிப்படுத்தாதலால் அவற்றை தொடக்கத்திலேயே கண்டறிவது மிக மிக அவசியமான ஒன்று.
 சில புற்றுநோய்களுக்கு, தொடக்க காலங்களில் கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்படும் போது உயிர்வாழும் காலம் கூடுதலாக இருக்கும்.
 இந்த நிலைமைகளுக்கான ஆய்வு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மேற்கொள்ள முடியும். இது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தேசிய சுகாதாரத் திட்டத்தின் ஒரு பகுதியாக, சுகாதார, குடும்ப நலத்துறை அமைச்சகம் சார்பில் ஐந்து பொதுவான தொற்றுநோயற்ற நோய்களை மக்கள்தொகை அடிப்படையில் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
 புதுவையில் பிப்ரவரி முதல் குறிப்பிட்ட சில சுகாதார நிலையங்களில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 30 வயதிற்கு மேற்பட்டோரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன்படி, சுகாதார ஊழியர்கள் வீடு வீடாக சென்று 30 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு சர்க்கரை, ரத்த அழுத்தம் , உடல் எடை, இடுப்பு சுற்றளவு போன்ற முதல்கட்ட பரிசோதனை செய்து வருகின்றனர்.
 இந்நோய்களுக்கு சிகிச்சை அளிக்க பரிந்துரை, ஆலோசனைகள் மற்றும் தொடர் கண்காணிப்பு செய்யப்பட்டு வருகிறது. பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பவாய் புற்றுநோய்க்கான ஆய்வு அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், தாய் சேய் துணை நிலையங்களிலும் நடைபெறும்.
 இதில் ஒரு குடும்பத்தின் சுகாதார நிலை பற்றிய அட்டவணை, அனைத்து சுகாதார மையங்களிலும் ஆவணப்படுத்தி பாதுகாக்கப்படும். எதிர்வரும் ஆண்டுகளில் ஆண்டுக்கு ஒரு முறை சர்க்கரை, ரத்த அழுத்தம், உடல் எடை, இடுப்பு சுற்றளவு மற்றும் புற்றுநோயிக்கான முதற்கட்ட பரிசோதனை நடத்தப்படும்.
 பெண்களுக்கான மார்பக புற்றுநோய் மற்றும் கர்பவாய் புற்றுநோயிக்கான ஆய்வு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும்.
 இதன் அடுத்த கட்டமாக இணையதளத்தில் பாதுகாத்து வைக்கப்பட்ட ஆவணங்களை சரிப்படுத்தும் முயற்சியாக ஒரு செயலியை டாடா மற்றும் டெல் அறக்கட்டளை தயார் செய்துள்ளது.
 இந்த செயலியை பிரதமர் மோடி, காணொலிக் காட்சி மூலம் பிஜாப்பூரில் இருந்து, புதுவை அரியூர் சுகாதார நிலையத்தில் தொடக்கிவைத்தார்.
 இதன் மூலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தொற்றாநோய் குறித்த ஆய்வு செய்து தகவல்களை மேற்கொள்கிறார்களா என்பதை மத்திய அரசு நேரடியாக கண்காணிக்க முடியும். இந்தச் சேவை அடுத்த கட்டமாக கரிக்கலாம்பாக்கம் , திருபுவனை, கொசப்பாளையம் சுகாதார நிலையங்களில் விரைவில் அமல்படுத்தப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com