இலவச அரிசி கோப்புக்கு ஆளுநர் ஒப்புதல் 

புதுவையில் இலவச அரிசி திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார். 

புதுவையில் இலவச அரிசி திட்டத்துக்கு துணைநிலை ஆளுநர் கிரண் பேடி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.
 சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதம் 20 கிலோ அரிசியும், மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு 10 கிலோ அரிசியும் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
 புதுவை ஆளுநர் மாளிகையில் இலவச அரிசிக்கான கோப்பு 15 நாள்களாக தூங்குகிறது என்றும், இலவச அரிசித் திட்டத்துக்கு ஆளுநர் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறார் என்றும், முதல்வர் வே.நாராயணசாமி கடந்த 14-ஆம் தேதி குற்றஞ்சாட்டியிருந்தார்.
 இந்த நிலையில், புதுச்சேரி கிருமாம்பாக்கம் ஏரியில் படகுக் குழாம் திறப்பு விழாவுக்கு ஞாயிற்றுக்கிழமை சென்ற ஆளுநரிடம், இலவச அரிசி வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்தனர்.
 இதையடுத்து, இலவச அரிசி கோப்புக்கு திங்கள்கிழமை ஒப்புதல் வழங்கப்படும் என ஆளுநர் உறுதி அளித்தார்.
 அதன்படி, இலவச அரிசிக்கான கோப்புக்கு ஆளுநர் கிரண்பேடி திங்கள்கிழமை ஒப்புதல் அளித்தார்.
 இது குறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட உத்தரவு:
 குடிமைப்பொருள் வழங்கல் துறையின் கீழ் ரூ. 46.67 கோடி நிதி உள்ளது. 2018-19-இல் ரூ. 140 கோடி நிதி தேவை. அரசு முழு நிதிநிலை அறிக்கையை விரைவில் இதற்காக தாக்கல் செய்யும். வறுமைக் கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களில் அரிசி கோரும் விண்ணப்பங்கள் 48,357 மட்டுமே வந்துள்ளன. இதை ஆய்வு செய்வோம்.
 ஏழைக் குடும்பங்கள் இலவச அரிசியை வெளிசந்தையில் வாங்கும் உரிமையை தர தலைமைச் செயலர் கூறியுள்ளார். வங்கிக் கணக்கில் பணம் தருவதுதான் சுதந்திரத்தை தரும். கடத்தலை தடுக்க முடியும். பயனாளிகளை கலந்து ஆலோசித்து அதன் முடிவுகளை அனுப்ப வேண்டும்.
 வறுமை கோட்டுக்கு மேலுள்ள குடும்பங்களை இலவச அரிசி பெறும் திட்டத்தில் இருந்து உடன் நீக்கும் நடவடிக்கையை துறை செய்ய வேண்டும்.
 புதுச்சேரி , காரைக்கால் பிராந்தியத்தில் ஏழ்மை நிலையிலுள்ள சிவப்பு நிற குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 20 கிலோ அரிசியை ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கு வழங்க உத்தரவிட்டுள்ளேன். அதேபோல, மஞ்சள் நிற குடும்பஅட்டை தாரர்களுக்கு தலா பத்து கிலோ அரிசியும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com