Enable Javscript for better performance
துறைமுகங்களை தனியாருக்கு சாதகமாக்கும் சாகர் மாலா திட்டத்தைக் கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா- Dinamani

சுடச்சுட

    

    துறைமுகங்களை தனியாருக்கு சாதகமாக்கும் சாகர் மாலா திட்டத்தைக் கைவிட வேண்டும்: ஜவாஹிருல்லா

    By DIN  |   Published on : 09th February 2018 08:12 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தனியாருக்குச் சாதகமாக துறைமுகங்களை மாற்றும் சாகர் மாலா திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லா வலியுறுத்தினார்.
    மனிதநேய மக்கள் கட்சியின் 10-ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, சென்னை முதல் கன்னியாகுமரி வரை கிழக்குக் கடற்கரைச் சாலை  வழியாக விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. கட்சியின் தொடக்க விழாவையொட்டி, புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகள் வியாழக்கிழமை நடைபெற்றன.
    இதில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றன ஜவாஹிருல்லா  செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
    மத்திய அரசு சாகர் மாலா திட்டத்தை நாடு முழுவதும் உள்ள துறைமுகங்களில் அமல்படுத்துவதற்கான நடவடிக்கையை எடுத்து வருகிறது. இந்தத் திட்டத்துக்கு ரூ.7 லட்சம்  கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  கடற்கரைப் பகுதிகளில் வசிக்கும் மீனவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதுதான் இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாக உள்ளது. இந்தத் திட்டத்தால் 25 கோடி மீனவர்கள் பாதிக்கப்படுவர்.
    பல்வேறு புதிய துறைமுகங்கள்,  ஏற்கெனவே இருக்கக்கூடிய துறைமுகங்கள், சிறிய மீன்பிடித் துறைமுகங்கள் தனியார் மயமாக்கும் நிலையை இந்தத் திட்டம் ஏற்படுத்தும். மேலும், இந்திய கடற்கரையோரம் உள்ள தீவுகளைத் தனியாருக்கு தாரைவார்க்கும் நிலை உருவாகிவிடும்.
    இந்தத் திட்டத்தால் மீனவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி,  துறைமுகங்கள் அமைப்பது, பெரிய அளவில் நிலக்கரி இறக்குமதி செய்வது போன்றவற்றால் சுற்றுச்சூழல் கேடுகளும் ஏற்படும்.  எனவே,  சாகர் மாலா திட்டத்தைக் கைவிட வேண்டும்.
    முத்தலாக் சட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும் சிறையில் தள்ளக்கூடிய நிலை ஏற்படும். அப்பாவி இஸ்லாமியர்களை சிறையில் தள்ளக்கூடிய சட்டமாகத்தான் முத்தலாக் சட்டத்தை பார்க்கிறோம்.  எனவே, முத்தலாக் சட்டத்தை கைவிட வேண்டும்.
    வாக்குப்பதிவு இயந்திரம் மூலம் தேர்தல் நடத்தும்போது பல குளறுபடிகள் ஏற்படுகின்றன. அமெரிக்காவில் கூட வாக்குச்சீட்டு முறைதான் நடைமுறையில் உள்ளது. எனவே, மின்னணு வாக்குப்பதிவு முறையைக் கைவிட்டு வாக்குச்சீட்டு மூலம் வாக்களிக்கும் முறையை அமல்படுத்த வேண்டும். இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி விழிப்புணர்வு பயணம் மேற்கொள்கிறோம்.
    நீட் தேர்வு தமிழகம்,  புதுவை மீது வலுக்கட்டாயமாகத் திணிக்கப்பட்டுள்ளது. இதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
    தமிழகத்தில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்காடு மொழியாக தமிழை அங்கீகரிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
    ஆனால், அரசியல் சாசன சட்டத்தில் குடியரசுத் தலைவர் மூலமாக ஒரு மாநிலம் விரும்பும் மொழியிலேயே அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றங்களில் வழக்காடு மொழி அமையலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
    புதுவை துணைநிலை ஆளுநரின் செயல்பாடு மாநில அரசின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் உள்ளது. சிறுபான்மை மக்களுக்கு மத்திய அரசின் பட்ஜெட் எந்தவிதப் பலனும் அளிக்கப்போவதில்லை.  ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளனர்.
    ஆனால், ஒவ்வோர் ஆண்டும் ஹஜ் பயணத்தின்  மூலம் மத்திய அரசுக்கு ரூ.700 கோடிக்கும் மேலாக லாபம் கிடைக்கிறது என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் தெரிய வந்துள்ளது என்றார் அவர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai