Enable Javscript for better performance
வட மாநிலங்களில் பெண்களுக்கு சுதந்திரம் தேவை: முதல்வர் நாராயணசாமி- Dinamani

சுடச்சுட

    

    வட மாநிலங்களில் பெண்களுக்கு சுதந்திரம் தேவை: முதல்வர் நாராயணசாமி

    By DIN  |   Published on : 09th February 2018 08:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வட மாநிலங்களில் பெண்களுக்கு சுதந்திரம் கிடைக்க போதிய நடவடிக்கை எடுப்பது அவசியம் என முதல்வர் வே.நாராயணசாமி வலியுறுத்தினார்.
    நிவேதிதையின் 150-ஆவது  ஆண்டு பிறந்த தின ரத யாத்திரை புதுச்சேரிக்கு புதன்கிழமை இரவு வந்தது.  இதனை வரவேற்கும் சிறப்பு நிகழ்ச்சி பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் வியாழக்கிழமை மாலை நடைபெற்றது
     நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற முதல்வர் நாராயணசாமி பேசியதாவது:
    ஒரு அமைப்பில் இருப்பவர்கள்,  தனி மனிதர்களாக இருந்தாலும் பன்முகம்  கொண்டவர்களாக இருப்பது மிகவும் கடினம்.  
    பல சூழ்நிலைகளில் தங்களை தேவைக்கு  ஏற்றார் போல அர்ப்பணித்துக் கொள்வது என்பது சிரமமானது.  
    ஆனால், அந்த பன்முகத்தன்மையை சகோதரி நிவேதிதையின் வாழ்க்கையை படிக்கும் போது நமக்கு தெளிவாக தெரிகிறது. அவர் விவேகானந்தரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்ததால்,  அவருடைய ஆன்மிகத்தில் ஈர்ப்பு ஏற்பட்டு,  இந்தியாவுக்கு வந்து சேவையாற்றினார்.
    அரவிந்தரை சந்திக்கும் போது நிவேதிதைக்கு  போராட்டக் குணமும்,  பாரதியாரை சந்தித்த போது பெண்ணுரிமையை காக்க வேண்டும் என்ற எண்ணமும் வந்தது.  
    அதுமட்டுமன்றி மக்கள் வாடும் போதும்,  துன்பப்படும் போதும் அவர்கள் பக்கத்தில் இருந்து சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் போன்ற பன்முகத் தன்மையைக் கொண்டு அவர் வாழ்ந்ததால் தான் அவரை நாம் போற்றுகிறோம்.  சகோதரி நிவேதிதையின் கனவை நாங்கள் ஓரளவு நிறைவேற்றியுள்ளோம். 
    ஹரியாணா,   உத்தரபிரதேசம்,   மத்திய பிரதேசம் போன்ற வடமாநிலங்களில் பெண்களுக்கு போதிய சுதந்திரம் கிடையாது.  அதுபோன்ற நிலை இப்போதும் இருந்து வருகிறது. அதனை மாற்ற வேண்டும்.   பெண்களை போற்றும்,  பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் நாட்டில்,   ஓட்டுரிமை இருந்தும் வடமாநிலங்களில் மக்களவை,  சட்டப்பேரவைக்கு பெண்கள் செல்லும், செல்ல வாய்ப்பு குறைவாக உள்ளது. தென் மாநிலங்களில் பெண்களுக்கு விழிப்புணர்ச்சி அதிகமாக இருக்கிறது.  
    நிவேதிதையின் 150-ஆவது ஆண்டு பிறந்த தின ரத யாத்திரைக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் வைத்த கோரிக்கையின் படி நிவேதிதையின் பெயரை கல்லூரியில் கட்டப்படும் கட்டடத்துக்கு சூட்டப்படும் என்றார்.  முன்னதாக, நிவேதிதை ரத யாத்திரைக் குழு மாநில ஒருங்கிணைப்பாளர் வானதி சீனிவாசன் நிவேதிதையின் வாழ்க்கை வரலாறு குறித்துப் பேசினார்.  
    நிகழ்ச்சிக்கு ராதாகிருஷ்ணன் எம்.பி. தலைமை வகித்தார்.  கல்லூரி முதல்வர் பூங்காவனம் வரவேற்றார்.   அமைச்சர் இரா.கமலக்கண்ணன்,  எம்எல்ஏ வையாபுரி மணிகண்டன்,  விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் தலைவர்  செல்வகணபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai