Enable Javscript for better performance
காலஅவகாசம் அளித்து கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    காலஅவகாசம் அளித்து கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும்

    By DIN  |   Published on : 01st June 2018 10:20 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கால அவகாசம் அளித்து கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் நடத்த வேண்டும் என்று புதுவை அதிமுக பேரவைக்குழுத் தலைவர் ஆ.அன்பழகன் வலியுறுத்தினார்.
    இதுகுறித்து, செய்தியாளர்களுக்கு வியாழக்கிழமை அவர் அளித்த பேட்டி: 
    புதுவையில் மருத்துவ மேல்நிலை படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் அரசு துணையோடு தொடர்ந்து முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன. கட்டணக்குழு புதுச்சேரியில் உள்ள மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளிலும் ரூ.20.34 லட்சம் மருத்துவ மேல்படிப்பு கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
    ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்த 2 மாணவர்கள் கட்டணத்தை வரைவோலையாக (டி.டி.) எடுத்துக்கொண்டு பிற்பகல் 2 மணிக்கு சென்றனர். 
    ரூ.40 லட்சம் கேட்டதால் அவர்கள் சேரவில்லை. இதையடுத்து பிற்பகல் 3 மணியளவில் கல்லூரி நிர்வாகமே 2 பேரை தேர்வு செய்து நிரப்பிவிட்டது. மேலும், இதை நீதிமன்றத்திலும் தெரிவித்துள்ளது. இந்த வழக்கில் புதுவை அரசு வழக்குரைஞர் ஆஜராகவில்லை. 
    அதுபோல, பிம்ஸ் கல்லூரி எங்களுக்கு ஒரு நிலை, பிற கல்லூரிக்கு ஒரு நிலையா? எனக்கேட்டு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கிலும் அரசு வழக்கறிஞர் ஆஜராகவில்லை. 
    தனியார் மருத்துவக் கல்லூரிகளின் அனைத்து செயல்களுக்கும் அரசும், சுகாதாரத்துறையும் துணை போவது முறையற்ற செயல். இது குறித்து ஆளுநர் விசாரணை நடத்த வேண்டும். 
    பல்வேறு கூட்டுறவு சங்கங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. இத்தேர்தல் முறையாக இல்லை. புதிய உறுப்பினர்கள் சேர்ப்பதற்கு கால அவகாசம் தரப்படவில்லை. 30 உறுப்பினர் உள்ள கூட்டுறவு சங்கங்களுக்குக்கூட 9 இயக்குநர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.
    இளங்கோ நகர் கூட்டுறவு சங்கத்திற்கான தேர்தல் ஜூன் 4}ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் புதுச்சேரி நகரப் பகுதியில் 650 உறுப்பினர்கள் உள்ளனர். அதில் 5 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும், 750 உறுப்பினர்கள் உள்ள முதலியார்பேட்டை கிளைக்கு 2 இயக்குநர்கள் தேர்வு செய்யப்பட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற முறைகேடுகள் களையப்பட வேண்டும்.
    புதுச்சேரியில் ஆண்டுதோறும் சுமார் ரூ.400 கோடி கல்விக்கு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கப்படுகிறது. 
    ஆனால் பொதுத் தேர்வுகளில் புதுவையின் தேர்ச்சி தமிழகத்தில் தேர்ச்சியில் கடைசி மாவட்டமாக உள்ள விழுப்புரத்தைவிட பின்தங்கி உள்ளது. கல்வித்தரம் உயர்த்தப்படவில்லை. 
    தூத்துக்குடி சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்திருப்பது நியாயமான கருத்து. ஜெயலலிதா இருந்திருந்தால் விஷமிகளுக்கு இடமிருந்திருக்காது என்பது ஏற்புடையது என்றார் அன்பழகன்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai